×

பள்ளிப்பட்டு அருகே காட்டுப் பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி


பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கரும்புத் தோட்டத்தை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக ஒரு விவசாய நிலத்தில் வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி நேற்றிரவு 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முறையான அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயியை வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே வெளியகரம், புது காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், அதே பகுதியை சேர்ந்த தாஸ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை 4 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து கரும்பு சாகுபடி செய்து வந்துள்ளார். இந்த கரும்பு தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் புகுந்து நாசப்படுத்துவதை தடுக்க, விவசாய நிலைத்தை சுற்றிலும் அரசின் அனுமதியின்றி முறைகேடாக கோவிந்தராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு இதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர், கொசஸ்தலை ஆற்றிலிருந்து கோணிப் பையில் மணல் அள்ளி செல்வதை ரோந்து போலீசார் கண்டறிந்து பிடித்துள்ளனர். பின்னர் நந்தகுமாரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு நந்தகுமாரை விட்டுவிடும்படி அதே வெளியகரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பார்த்தசாரதி (19) போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, நந்தகுமார்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சாய்குமார் (23) என்பவர் செல்போனில் போலீசாரை அழைத்துள்ளார். பின்னர் போலீசாரை அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு வரும்படி சாய்குமார் அழைத்துள்ளார்.

போலீசாரிடம் செல்போனில் பேசியபடி கோவிந்தராஜின் கரும்பு தோட்டத்தின வழியாக சென்றபோது, அங்கு புதைக்கப்பட்ட மின்வேலியில் கால் பட்டதில் மின்சாரம் தாக்கி சாய்குமார் பாய்ந்து வீசப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற பார்த்தசாரதி (19) என்பவரை ஓடிச்சென்றபோது, அவரும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் அலறி துடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மின்வேலியில் சிக்கிய பார்த்தசாரதி, சாய்குமார் ஆகிய 2 பேரையும் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்களின் பரிசோதனையில், கரும்பு தோட்டத்தில் இருந்த மின்வேலியில் தனித்தனியாக சிக்கி பார்த்தசாரதி, சாய்குமார் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து பலியாகியிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்ததும் கரும்பு தோட்டத்தில் முறைகேடாக மின்வேலி அமைத்திருந்த விவசாயி கோவிந்தராஜ் தலைமறைவாகிவிட்டார். பின்னர், மின்சாரம் பாய்ந்ததில் இறந்துபோன 2 வாலிபர்களின் சடலங்களை போலீசார் கைப்பற்றி, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரும்பு தோட்டத்தில் முறைகேடாக மின்வேலி அமைத்து தலைமறைவான கோவிந்தராஜை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post பள்ளிப்பட்டு அருகே காட்டுப் பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,PALLIPATTA ,Pallipattu ,Dinakaran ,
× RELATED பன்றிகளை விரட்ட போடப்பட்டிருந்த மின்...