×

ரூ.2 கோடியில் சுற்றுலாத்தலமாக மாறி வரும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் மழையால் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்ற ₹2 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மழையால் நேற்று அதிகாலை முதல் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களாக திகழ்வது ஏலகிரிமலை. இங்கு வார நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி ₹2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுலா தலமாக மாற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏலகிரிமலைக்கு டுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தாலும், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதிக்கு மழை சீசன் நாட்களில் மட்டுமே வருவார்கள்.

குறிப்பாக மழைக்காலத்தின்போதும், கோடை காலத்தில் அவ்வப்போது பெய்யும் திடீர் மழையின்போதும் ஏலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைக்காரணமாக ஜலகாம்பாறையில் தண்ணீர் கொட்டுவது வழக்கம். அதுபோன்ற நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் மிக குறைந்த அளவில் தண்ணீர் கொட்டிய நிலையில் அதன்பிறகு ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏலகிரிமலையில் அவ்வப்போது திடீர் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது.

இதன்காரணமாக நேற்று அதிகாலை முதல் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது. இதையறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் நீர்வீழ்ச்சிக்கு வர தொடங்கியுள்ளனர். இதேபோல் வார விடுமுறை நாள் மற்றும் கோடைவிடுமுறை காரணமாக ஏலகிரி மலைக்கு செல்வோரும் ஜலகாம்பாறைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் ஜலகாம்பாறையில் நீர்வரத்து தொடர்ந்து இருக்கும் என கருதப்படுகிறது. இந்த ஆண்டில் 2வது முறையாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

The post ரூ.2 கோடியில் சுற்றுலாத்தலமாக மாறி வரும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் மழையால் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Jalakambarai Falls ,Tirupattur ,Tirupathur ,Jalakambarai ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...