×

உத்தரப் பிரதேசம் ஃபரூக்காபாத் தொகுதியில் 8 முறை வாக்களித்த பாஜக நிர்வாகியின் 16 வயது மகன் கைது..!!

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த பாஜக நிர்வாகியின் 16 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வாக்குச்சாவடி மையத்தில் மறு வாக்குப்பதிவு நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி 4கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புட் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ஃபரூக்காபாத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றுக்குள் புகுந்த பாஜக நிர்வாகி அணில் சிங் தாகூரின் 16 வயதுடைய மகன் ராஜன் சிங் பாஜக வேட்பாளர் முகேஷுக்கு 8 முறை வாக்களித்துள்ளார். இதனை அவரே தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் வாக்குபட்டனை அழுத்தும் போது தனது விரலால் எண்ணிக்கொண்டே அழுத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

18வயது நிரம்பாத சிறுவன் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட ராகுல் காந்தி தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக ஜனநாயகத்தை கொள்ளையடிக்க பார்க்கிறது என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அரசியல் சாசன பொறுப்பை மறந்துவிட கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜகவின் பூத் கமிட்டி கொள்ளை கமிட்டி போல தான் நடந்து கொள்ளும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்தார். சிறுவனை வாக்களிக்க அனுமதித்த விவகாரத்தில் வாக்குச்சாவடியில் இருந்த அனைத்து அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை அடுத்து உதவி தேர்தல் அலுவலர் பிரதீப் திரிபாதி கொடுத்த புகாரின் பேரில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.

The post உத்தரப் பிரதேசம் ஃபரூக்காபாத் தொகுதியில் 8 முறை வாக்களித்த பாஜக நிர்வாகியின் 16 வயது மகன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Farrukhabad constituency ,Uttar Pradesh ,Electoral Commission ,Farrukhabad ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி...