×

5வது நாளாக பெய்த கனமழை

ஏற்காடு, மே 20: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நீடிக்கும் நிலையில், மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். சேலத்தில் உள்ள ஏற்காட்டுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக தினமும் மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஏற்காடு மக்கள் கூறுகையில், நடப்பாண்டு கோடையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால், செடி, கொடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் தவித்தோம். குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது. இதனால், ஏற்காட்டின் இதமான தட்பவெப்பம் இன்றி வறண்ட வானிலை காணப்பட்டது.

வரும் 22ம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில், கடந்த சில நாட்களாக, ஏற்காட்டில் பெய்த மழை, இங்கு நிலவிய வறண்ட வானிலையை முற்றிலும் மாற்றியுள்ளது. வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடக்கவிருக்கும் கோடை விழா- மலர்க்கண்காட்சி சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர். இடைப்பாடி: இடைப்பாடி பஸ் நிலையம், கொங்கணாபுரம், பூலாம்பட்டி, கல்வடங்கம், கோனேரிப்பட்டி, காவேரிபட்டி, அண்ணமார் கோயில், தேவூர், அரசிராமணி, செட்டிப்பட்டி, மூலப்பாதை உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் கொளுத்தியது. மாலையில் பரவலாக மழை பெய்ததால், வயல்களை தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பல்வேறு இடங்களில் வாழை, பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது. இடைப்பாடி பஸ் நிலையத்தில் சாக்கடை நிரம்பி தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. பஸ் நிலையத்தின் பல பகுதிகளில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர்.

The post 5வது நாளாக பெய்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Tamil Nadu ,Salem ,Dinakaran ,
× RELATED ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு