×

அரூர் அருகே சித்தேரியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கால் 7 மலை கிராமங்கள் துண்டிப்பு: கயிறு கட்டி சாலையை கடக்கும் மக்கள்

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த 3 தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கோட்டப்பட்டி, சிட்லிங், நரிப்பள்ளி, சித்தேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று சித்தேரி மலை பகுதியில், 2 மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
இதனால், காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

மலை வழிச்சாலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாச்சாத்தி பகுதியை ஒட்டியை பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கலசப்பாடி, அரசநத்தம், அழகூர், ஜக்கம்பட்டி, கருகாம்பட்டி, கோட்டக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் வாச்சாத்தி வழியாக தான் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். கனமழையால், வாச்சாத்தி பகுதியில் உள்ள காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

இதனால், வெளியிடங்களில் இருந்து திரும்பிய மக்கள் தங்கள் வசிப்பிடம் செல்ல வழியின்றி தவித்தனர். சாலைகள் துண்டிக்கப்பட்டதையடுத்து, கயிறு கட்டி அதனை பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக கடந்து வருகின்றனர். டெல்டா, மதுரையில் கனமழை  டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலையும் மழை கொட்டியது. நாகையில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கரூர் மாவட்டத்திலும் மழை பெய்தது.

திருச்சி மாவட்டத்தில் தா.பேட்டை, முசிறி, துறையூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதேபோல் திருச்சி மாநகரில் இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சந்திரா(60) என்பவரின் வீடு இடிந்து தரைமட்டமானது. அப்போது சந்திரா, அவரது 2 குழந்தைகள் இல்லாததால் உயிர் தப்பினர்.

மதுரை: மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் மதுரை மானகிரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. நகரில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தேனி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை கொட்டியது. குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

கொடைக்கானலில் நேற்று பகல் முழுக்க மழை பெய்தததால், சுற்றுலாப்பயணிகள் சிரமமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தத்தில் ராமசாமி (43) என்பவர், நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்தபோது இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் மின்னல் தாக்கி பலியானார்.

The post அரூர் அருகே சித்தேரியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கால் 7 மலை கிராமங்கள் துண்டிப்பு: கயிறு கட்டி சாலையை கடக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Chitheri ,Aroor ,Dharmapuri district ,Arur ,Kottapatti ,Sidling ,Naripalli ,Chitheri forest ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு