×

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: நெல் கொள்முதல் 10 லட்சம் டன் குறைந்ததற்கு விலை குறைவே காரணம் என்பதால் குவிண்டாலுக்கு ரூ.3000 உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் ஏறக்குறைய 10 லட்சம் டன் அளவுக்கு குறைந்திருக்கிறது.

வேளாண்மையை வருவாய் ஆதாரமாகக் கொண்ட மக்கள் அதிகம் வாழும் தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு நான்கில் ஒரு பங்குக்கும் மேலாக குறைந்திருப்பதை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023-24ம் ஆண்டில் மொத்தம் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இலக்கில் 60 விழுக்காட்டைக் கூட அரசால் எட்ட முடியாது என்பது தான் உண்மை. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்பதால் பாசனப் பரப்பு கணிசமாக குறைந்தது. ஆனால், நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன?

என்பதை அரசு ஆய்வு செய்து குறைகளைக் களைய வேண்டும். முதல் நடவடிக்கையாக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் சென்றால் உடனடியாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து, பணத்தைப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,PAMA ,President ,Tamil Nadu Consumer Goods Corporation ,
× RELATED முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம் ரத்து: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு