×

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: அதிகபட்சமாக பீன்ஸ் கிலோ ரூ.250க்கு விற்பனை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் 750 லாரிகளில் 7 ஆயிரம் டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

இதனை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சில்லரை காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக வரும் காய்கறிகள் வரத்து நேற்று திடீரென குறைந்தது. 540 லாரிகளில் மொத்தமாக 5 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

இதில், ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ பீன்ஸ் நேற்று அதிகபட்சமாக ரூ.250க்கு விற்கப்பட்டது. சில்லறை காய்கறி கடைகளில் ரூ.300 வரை விற்கப்பட்டது. ஒரு கிலோ அளவில் வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.60, தக்காளி ரூ.30, பீட்ரூட், சவ்சவ், கேரட் ஆகியவை ரூ.50, உருளைக்கிழங்கு, நூக்குள் ரூ.35, முள்ளங்கி, கோவைக்காய், கொத்தவரங்காய் ஆகியவை ரூ.30, வெண்டை, பாகல், சேம்பு, வெள்ளரி ஆகியவை ரூ.40க்கும், முட்டைகோஸ், காளிபிளவர் ரூ.25க்கும் விற்பனையானது.

இதேபோல், காராமணி ரூ.60, புடலங்காய் ரூ.45, சேனைக்கிழங்கு ரூ.75, முருங்கைக்காய் ரூ.60, பச்சைமிளகாய் ரூ.80, பூண்டு ரூ.380க்கும், அவரை ரூ.80, பீர்க்கன் ரூ.70, வண்ண குடைமிளகாய் ரூ.180 என காய்கறிகளின் விலை உயர்ந்து விற்பனையானது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் முத்துகுமார் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை உயர்வு இம்மாதம் வரை நீடிக்கும் என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: அதிகபட்சமாக பீன்ஸ் கிலோ ரூ.250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Annanagar ,Chennai ,Chennai Koyambedu market ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,
× RELATED கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி...