×

தடையை மீறி போராட்டம் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸ்: கட்சி தொண்டர்கள் பலர் கைது, டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் 144 தடை உத்தரவை மீறி, பாஜ தலைமையகத்தை முற்றுகையிட கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்றதால் பரபரப்பு நிலவியது. அவர்களை நடுவழியில் தடுத்த போலீசார் தொண்டர்கள் பலரையும் கைது செய்தனர். டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் சிறப்பு பேட்டி அளித்த முதல்வர் கெஜ்ரிவால், ‘‘ஆம் ஆத்மி தலைவர்களை சிறைக்கு அனுப்பும் விளையாட்டை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். எங்கள் கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் அனைவருடனும் பாஜ தலைமையகத்திற்கு வருகிறேன். உங்களுக்கு தைரியமிருந்தால், தேவைப்படும் அனைவரையும் கைது செய்து கொள்ளுங்கள்’’ என்று சவால் விடுத்தார்.

இதனால், பாஜ தலைமையகம் அமைந்துள்ள தீனதயாள் உபாத்யாய் மார்க் பகுதியை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தினர். அப்பகுதியில் கும்பலாக செல்ல 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பிற்பகல் 11 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்பட்டது. பாஜ அலுவலகத்தை யாரும் நெருங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த சூழலில் ஆம் ஆத்மி தொண்டர்களுடன், கெஜ்ரிவால் தலைமையில் அக்கட்சி தலைவர்கள் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது: பிரதமர் மோடி தன்னை சந்திக்க வருபவர்களிடம், ஆம் ஆத்மி கட்சியை அழிப்பதை பற்றி விவாதிக்கிறார். எதிர்காலத்தில் பாஜவுக்கு சவாலாக ஆம் ஆத்மி வளர்ந்து விடும். இதனால் அதை இப்போது அழிக்க வேண்டும். ஆம் ஆத்மியை ஒழித்து நசுக்க வேண்டுமென்பதில் மோடி உறுதியாக இருக்கிறார்.

இதற்காக அவர், ‘ஆபரேஷன் துடைப்பம்’ (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம்) என்கிற நடவடிக்கையை தொடங்கி உள்ளார்.  இந்த ஆபரேஷன் மூலம், இனி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள். வரும் நாட்களில் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். நமது அலுவலகத்தை காலி செய்து நடுத்தெருவுக்கு கொண்டு வர முயற்சிப்பார்கள். எனவே கட்சித் தலைவர்கள் இன்னும் பெரிய சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

ஆம் ஆத்மி ஒரு சிலரின் கட்சி அல்ல, 140 கோடி மக்களின் கனவுகளின் கட்சி. டெல்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசுகள் செய்த பணிகள், 75 ஆண்டுகளில் இதுவரையிலும் நாட்டு மக்கள் பார்த்திராதவை. எனவே ஆம் ஆத்மியின் சித்தாந்தம் நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. எங்கள் தலைவர்களை நீங்கள் கைது செய்யலாம். ஆனால் எங்கள் சித்தாந்தத்தை நீங்கள் எப்படி கைது செய்வீர்கள்? எங்களின் ஒரு தலைவரை நீங்கள் கைது செய்யலாம். ஆனால் எனது தாய் மேலும் 100 தலைவர்களைப் பெற்றெடுப்பார்.

ஒரு கெஜ்ரிவாலை நீங்கள் கைது செய்யலாம், அவர் நூறாயிரக்கணக்கான கெஜ்ரிவால்கள் உருவாவார்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்துப் பாருங்கள். கடந்த 2015ல் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் முதல் முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து பல குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை எதுவும் உண்மை என நிரூபிக்கப்படவில்லை. இப்போது மதுபான ஊழலில் ஈடுபட்டோம் என்று கூறுகிறார்கள்.

மதுபான ஊழல் நடந்தால், பணம் எங்கே, எங்கே போனது என்று பொதுமக்கள் அவர்களிடம் கேட்கிறார்கள். மதுபான ஊழல் ரூ.100 கோடி என்று சொல்கிறார்கள், பிறகு ஏன் 100 ரூபாய் கூட சோதனையில் கண்டுபிடிக்கவில்லை? எனவே இது அனைத்தும் புனையப்பட்ட போலி வழக்குகள். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார். அதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை வாழ்த்தியும், பாஜவுக்கு கண்டன கோஷமிட்டும் ஆம் ஆத்மி தலைவர்கள், தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.

அவர்களை நடுவழியில் தடுத்து நிறுத்திய போலீசார் திருப்பி அனுப்பினர். தடையை மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். ஆம் ஆத்மியின் இந்த பேரணியில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆம் ஆத்மி விடுத்த அறிக்கையில், ‘போலீசார் கைது செய்வார்கள் என்று நாங்கள் சாலையில் அரை மணி நேரம் காத்திருந்தோம். ஆனால் யாரையும் கைது செய்யாமல் பாஜ தனது தோல்வியை ஏற்றுக்கொண்டது’ என கூறப்பட்டுள்ளது.

* கெஜ்ரிவால் வீட்டில் சிசிடிவி கருவியை கைப்பற்றிய போலீசார்
கடந்த 13ம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்மீது தாக்குதல் நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை சேதப்படுத்திவிடுவார்கள் என ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து நேற்று டெல்லி போலீசார் கெஜ்ரிவால் வீட்டிற்கு வந்தனர். அங்கிருந்த சிசிடிவி டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதன் மூலம் கட்சியின் பெயரை கெடுக்க சதி நடப்பதாக டெல்லி அமைச்சர் அடிசி குற்றம்சாட்டி உள்ளார்.

The post தடையை மீறி போராட்டம் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸ்: கட்சி தொண்டர்கள் பலர் கைது, டெல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,BJP ,Delhi ,New Delhi ,Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...