×

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தேர்தலுடன் உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வரும் நிலையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அதாவது ஏப். 19, 26, கடந்த 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல்கள் தான் உள்ளன. ஐந்தாம் கட்டமாக, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகார், ஒடிசாவில் தலா 5, ஜார்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதாவது உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (லக்னோ), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), ஸ்மிருதி இரானி (அமேதி), காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி (ரேபரேலி), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் (ஹாஜிபூா்), தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா (பாரமுல்லா), ஆர்ஜேடி தலைவர் லாலுவின் மகளான ரோகினி ஆச்சார்யா (சரண்) உள்ளிட்ட 695 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை இரண்டாம் கட்டமாக 35 சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று மாலையுடன் மேற்கண்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. பரப்பளவின் அடிப்படையில் நாட்டிலேயே மிகப் பெரிய மக்களவைத் தொகுதியான லடாக்கில் மொத்தம் 1.84 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் மற்ற தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைக்கு இதுவரை நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தேர்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைக்கான 6, 7ம் கட்ட வாக்குப் பதிவுகள் வரும் 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ரூ.8,889 கோடி பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 16ம் தேதிமுதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம், நகை, இதர பொருள்கள் உள்ளிட்டவை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.543.72 கோடி உள்பட நாடு முழுவதும் இதுவரை ரூ.8,889 கோடி மதிப்பில் போதைப் பொருள்கள், மதுபானங்கள், தங்க நகைகள், இலவசப் பொருள்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.3,959 கோடி மதிப்பிலான போதைப் பொருள், ரூ.1,260 கோடியில் தங்கம், வெள்ளி, ரூ.849 கோடி ரொக்கம், ரூ.814 கோடி மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

6ம் கட்ட தேர்தலில் 889 பேர் போட்டி
தலைநகர் டெல்லி உட்பட எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

The post ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Odisha ,New Delhi ,Uttar Pradesh ,Legislative ,Council ,Dinakaran ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி...