×

வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: கோடை விழா ஏற்பாடு தீவிரம்

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில், வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு கோடை விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட் டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறையான இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளன.

சுற்றுலா பயணிகள் ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். குளுமையான சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். லேடீஸ் மற்றும் ஜென்ட்ஸ் சீட் பகுதியில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப் பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே ஏற்காட்டில் நடப்பாண்டு 47வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும் 22ம் தேதி முதல் தொடங்கி 26ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள், சமையல் போட்டி, படகு போட்டி நடைபெற உள்ளது. ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். அணை பூங்காவிற்கு சென்று விளையாடினர்.

The post வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: கோடை விழா ஏற்பாடு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : YERETTAT ,Yardat ,Salem district ,festival ,Dinakaran ,
× RELATED ஏற்காடு கோடை விழா நாளை தொடக்கம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்