×

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம்: திரளானோர் பங்கேற்பு

வைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி அவதார திருவிழாவில் நேற்று நவதிருப்பதி நாயகர்களான பெருமாள்களை சுவாமி நம்மாழ்வார் வரவேற்கும் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டத்தைச் சுற்றிலும் ஆன்மிக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் 9வது கோயிலாகவும், குரு ஸ்தலமாகவும் திகழும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் அவதார திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

5ம் திருநாளான நேற்று நவதிருப்பதி நாயகர்களான வைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சினிவேந்த பெருமாள், பெருங்குளம், மாயக்கூத்தப்பெருமாள், தென்திருப்பேரை நிகரில்முகில் வண்ணன், தொலைவில்லிமங்கலம், அரவிந்தலோசனர், இரட்டைதிருப்பதி தேவர்பிரான், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகிய பெருமாள்களை சுவாமி நம்மாழ்வார் வரவேற்கும் மங்களாசாசனம் என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசித்தனர்.

தொடர்ந்து நம்மாழ்வார் வீதியுலா வைபவமும், எம்பெருமான்கள் மண்டபத்தில் மாலை எழுந்தருளியதும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. இதையடுத்து 9 பெருமாள்களும் எழுந்தருளும் கருடசேவை நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு நடந்தது. இதற்காக நம்மாழ்வார் அன்னவாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில் திரளானோர் பங்கேற்று பெருமாள்களை தரிசித்தனர்.

விழாவின் சிகரமாக நம்மாழ்வார் எழுந்தருளும் தங்கத்தேரோட்ட வைபவம், வரும் 22ம் தேதியும், மறுநாள் காலை மாடவீதி புறப்பாடும் நடக்கிறது. 24ம் தேதி காலை சுவாமி நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் சன்னதிக்கு எழுந்தருளியதும் கந்த பொடி உத்ஸ்வம், திருமஞ்சனம் கோஷ்டி பல்லக்கில் சன்னதிக்கு எழுந்தருளி ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெறும். இரவு சிறப்பு பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளியதும் வீதியுலா நடக்கிறது. மறுநாள் 25ம்தேதி விடையாற்றும் வைபவம் நடக்கிறது.

யானை தாக்கியதில் பக்தர் காயம்
மங்களாசாசன நிகழ்ச்சியில் கூட்டம் அலைமோதிய நிலையில் ‘லட்சுமி’ என அழைக்கப்படும் இரட்டை திருப்பதி கோயிலின் யானையானது, அப்பகுதியில் சுவரோரம் நின்றிருந்த தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்ற பக்தரை துதிக்கையால் திடீரென தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்து பதறிய பக்தர்கள், அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர். உடனடியாக யானைப்பாகன், யானையை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தார். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

The post ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம்: திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Swami Nammalwar Mangasasana ,Alwarthunagari Adinathar Temple ,Swami Nammanalwar ,Nawathripathi ,Perumal ,Aadinathar Temple Vaikasi Avatar festival ,Swami ,Thoothukudi District ,Vaikundatha ,Nawathupathi ,Nammalwar ,Manghasasana ,Alwarthunagari Adhinadar Temple ,
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...