×

கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தினசரி மார்க்கெட் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா நடந்து வருகிறது. தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தனியார் மண்டபம் அருகே ஒரு பிரிவினர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த மற்றொரு பிரிவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் நள்ளிரவில் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டிஎஸ்பிக்கள் ஆலங்குளம் பர்னபாஸ், தென்காசி நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் கடையநல்லூர் ராஜா, புளியங்குடி பாலகிருஷ்ணன், எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு பிரிவினர் அளித்த புகாரின் பேரில், மற்றொரு பிரிவைச் சேர்ந்த ஒரு சிலரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதனிடையே நேற்று காலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் தரப்ைப சேர்ந்தவர்கள், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் கடையநல்லூரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. விரைந்து வந்த ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கோயில் விழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் அடுத்தடுத்து நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran.

Tags : Kadayanallur temple festival ,Kollam-Tirumangalam ,Kadayanallur ,Vaikasi Brahmotsava festival ,Muppudathi Amman temple ,Thenkasi district ,Kollam-Tirumangalam road ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...