×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு

சத்தியமங்கலம்: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து 194 கனஅடியாக இருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நேற்று மாலை நீர் வரத்து 1192 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி, பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.58 அடியாகவும், நீர் இருப்பு 3.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Sathyamangalam ,Tamil Nadu ,Mettur Dam ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது