×

நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது

பெரம்பூர்: சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் தற்போது சைபர் க்ரைம் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு காவல் நிலையங்களில் கூடுதலாக சைபர் க்ரைமுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டம் – ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் எவ்வளவு புகார்கள் வருமோ அதற்கு சமமாக தற்போது சைபர் க்ரைமிலும் புகார்கள் குவிந்து வருகின்றன. நமக்கு அறிமுகம் இல்லாத செயலிகளை டவுன் லோடு செய்ய வேண்டாம். தேவையில்லாத நபர்களுடன் சாட்டிங் செய்ய வேண்டாம். வங்கி கணக்கு விவரங்களை வெளியே சொல்ல வேண்டாம். ஓடிபி எனப்படும் தனிப்பட்ட ரகசிய குறியீட்டு எண் போன்ற விவரங்களை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் போன்ற பல்வேறு விஷயங்களை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இந்த விஷயத்தில் படித்தவர்களே அதிகம் ஏமாந்து வருகின்றனர். சமீப காலமாக சமூக வலைதளங்கள் வாயிலாக முன்பின் தெரியாதவர்களுடன் பேசி பழகி அவர்கள் பண பிரச்னை என கேட்கும்போது பணத்தையும் அனுப்பி கடைசியில் ஏமாந்து போலீசாரிடம் புகார் மனுக்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், வியாசர்படியை சேர்ந்த ஒரு இளைஞரை, 5 இளைஞர்கள் சேர்ந்து ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு அதன் பிறகு மீண்டும் அதிக பணம் கேட்டு மிரட்டி சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: வியாசர்பாடி 3வது பள்ளத் தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் (24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் தனது செல்போனில் சே ஹாய் என்ற ஆன்லைன் டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளார். அதில் நிறைய பெண்களுடன் சேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அகிலா என்ற ஒரு பெண், தாமோதர கண்ணனிடம் மிகவும் ஜாலியாக பேசி உள்ளார். மேலும் செக்ஸ் சாட்டிங்கும் செய்துள்ளார்.

அப்போது அவர் தனக்கு அவசர தேவையாக 500 ரூபாய் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். தாமோதர கண்ணனும் பணம் அனுப்பி உள்ளார். அதன் பிறகு தாமோதர கண்ணனால் அகிலாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. மீண்டும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தாமோதர கண்ணனை தொடர்பு கொண்ட நபர், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பேசுவதாகவும், நீங்கள் பணம் அனுப்பிய அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஆன்லைனில் அவருடன் பழகிய நபர்கள்தான் காரணம். அவருக்கு நீங்களும் பணம் அனுப்பி உள்ளீர்கள். எனவே உன் மீது வழக்கு பதிவு செய்ய போகிறோம் என மிரட்டி உள்ளார். மேலும், வழக்கில் இருந்து உன்னை விடுவிக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும், என கேட்டுள்ளார். இதைக் கேட்டு பயந்து போன தாமோதர கண்ணன், தனது வங்கி கணக்கில் இருந்த 13 ஆயிரத்து 500 ரூபாயை அனுப்பி உள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட நபர், மீண்டும் அவரிடம் போன் செய்து இந்த வழக்கில் உங்கள் மீது எப்ஐஆர் போடாமல் இருக்க வேண்டும் என்றால் 70,000 ரூபாய் வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வியாசர்பாடி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பேரில் வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் சைபர் க்ரைம் போலீசார் தாமோதரன் கண்ணனை மிரட்டிய நபரின் செல்போன் எண்களை தொடர்ந்து கண்காணித்து லோக்கேஷன் எடுத்து வந்தனர். இந்நிலையில் அவரை மிரட்டிய செல்போன் எண், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் அதிரடியாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் பட்டாபிராம் பகுதிக்கு சென்று 4 இளைஞர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பட்டாபிராம் வேளாங்கண்ணி குறுக்கு தெருவை சேர்ந்த லியோ துரை (25), பட்டாபிராம் உழைப்பாளர் நகரை சேர்ந்த சீனிவாசன் (26), அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் என்கின்ற தமிழன் (25), முகமது ரியாஸ் (23), பிரித்திவிராஜ் (28) என்பது தெரியவந்தது. இதில் லியோ துரை மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் பட்டதாரிகள். மற்ற 3 பேரும் 10ம் வகுப்பு வரை படித்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு சிறிய தனியார் கம்பெனிகளில் வேலை செய்து வருகின்றனர்.
பொழுதுபோக்கிற்காக இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ‘சே ஹாய்’ எனப்படும் டேட்டிங் செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் ஆண், பெண் என பலரும் செக்ஸ் சாட்டிங் செய்வதையும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு டேட்டிங் செல்வதையும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் தங்களை பெண் போல அந்த டேட்டிங் செயலியில் பெயரை மாற்றி பதிவிட்டுள்ளனர். அப்போது பல ஆண் நண்பர்கள் இவர்களுடன் சாட்டிங் செய்துள்ளனர். இதில் அந்த விஷயத்தில் வீக்கான சிலர் செக்ஸ் சாட்டிங் செய்துள்ளனர். அவர்களை குறி வைத்து பிடிபட்டவர்கள் காம வலையில் வீழ்த்தி உள்ளனர். அப்போது பெண் சாட்டிங் செய்வது போல மிகவும் செக்ஸியாக பேசியுள்ளனர். மேலும் எனது உடலில் மேலே துணி இல்லாமல் காட்டுவதற்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். கீழே துணி இல்லாமல் காட்டுவதற்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என மிகவும் பச்சையாக பேசி பலரிடம் பணம் பறித்துள்ளனர். இந்த சபலத்திற்கு ஆளான பலரும் இவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை அக்கவுண்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிய அடுத்த நிமிடமே இவர்கள் பணம் கொடுத்த நபரை பிளாக் செய்து அதன் பிறகு இவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு செய்துள்ளனர்.

பணம் பறிகொடுத்தவர்களும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் நமக்கு அவமானம் என நினைத்து திருடனுக்கு தேள் கொட்டியது போல புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர். இவ்வாறு கடைசி ஒரு வருட காலமாக இவர்கள் பணத்தை வாங்கி 5 பேரும் மது, மாது என ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துள்ள னர்.இந்த ஏமாற்று கும்பலிடம் சிக்கியவர் தான் வியாசர்பாடியை சேர்ந்த தாமோதர கண்ணன். இவரும் 13 ஆயிரம் ரூபாய் பணத்துடன் நின்றிருந்தால் பிடிபட்ட 5 பேரும் சிக்கி இருக்க மாட்டார்கள். ஆனால் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் எனக் கூறி சாட்டிங் செய்த பெண் இறந்து விட்டால் என பொய் சொல்லி மேலும் 70,000 ரூபாய் கேட்டதால் நொந்து போன தாமோதர கண்ணன் புகார் கொடுக்க முன் வந்துள்ளார். புகாரின் பேரில் தான் இந்த மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இதுபோல இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி பெயரில் போலியான பல பெண் அக்கவுண்டுகளை ஓபன் செய்து அதன்மூலம் அந்த செயலியில் வரும் ஆண் நண்பர்களிடம் செக்ஸியாக பேசி பணத்தை சுருட்டி உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் மற்ற ஆண் நண்பர்களை கவர்வதற்காக இன்டர்நெட்டில் இருந்து பல்வேறு பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை பயன்படுத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் புகார் கொடுக்க யாரும் முன் வராததால் இவர்கள் பிடிப்படுவதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகியுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே இவர்கள் பலரையும் ஏமாற்றி வந்துள்ளது போலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து லியோ துரை, சீனிவாசன், தமிழன், முகமது ரியாஸ், பிரித்விராஜ் ஆகிய ஐந்து பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள லியோ துரை மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவர் மீது இதே போன்று தனியார் செயலி மூலம் ஆண் நண்பர்களை ஏமாற்றியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவர்கள் சிறைக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால் விபரீதம் டேட்டிங் செயலி மூலம் பல ஆண்களை காம வலையில் வீழ்த்தி பண மோசடி: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Dinakaran ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்