×

ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்

கவுகாத்தி: “ராகுல் காந்தி தேர்தல் பிரசாரங்களில் காட்டுவது சீனாவின் அரசியலமைப்பு புத்தகம்” என சர்ச்சை கிளம்பிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு நெட்டிசன்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர். மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பை மாற்றி விடும் என்பதை மக்களுக்கு சொல்வதற்காக சிவப்பு அட்டை போடப்பட்ட இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை கையிலெடுத்து செல்கிறார். மேலும் பிரசாரங்களில் ஈடுபடும் இந்தியா கூட்டணி கட்சியினரும் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை எடுத்து செல்ல வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தி எடுத்து செல்வது சீனாவின் அரசியலமைப்பு புத்தகம் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். ராகுலின் கையில் சிவப்பு அட்டை போடப்பட்ட புத்தகம் வைத்துள்ள புகைப்படங்களை ஹிமந்த பிஸ்வா சர்மா தன் ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “இந்தியாவின் உண்மையான அரசியல் அமைப்பு புத்தகம் நீலநிற மேலட்டையுடன் இருக்கும். ராகுல் காந்தி சிவப்பு அட்டை போடப்பட்ட சீன அரசியலமைப்பு புத்தகத்தை கையில் எடுத்து செல்கிறார். நீலநிற அட்டையுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது கடமையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ராகுல் காண்பித்தது இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகம் தான். சிவப்பு நிற அட்டையுடன் இருக்கும் இந்த புத்தகம் ஒன்றிய அரசால் ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கோட் பாக்கெட் பதிப்பு என்று அசாம் முதல்வருக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

The post ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Assam ,chief minister ,Guwahati ,Himanta Biswa Sharma ,Rahul Gandhi ,Congress ,India ,Lok Sabha ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...