×

2வது இடம் யாருக்கு?: குறி வைக்கும் ஐதராபாத், ராஜஸ்தான்

ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் 17வது சீசன் லீக் சுற்று இன்றுடன் நிறைவடையும் நிலையில், 2வது இடத்தை பிடிக்க ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடையே போட்டி நிலவுகிறது. இன்று நடைபெற உள்ள 2 லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத், ராஜிவ் அரங்கில் பிற்பகல் 3.30க்கு தொடங்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கும் சன்ரைசர்ஸ், ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்டாலும் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் முனைப்புடன் உள்ளது.

இந்த போட்டியில் வென்றால் சன்ரைசர்ஸ் (8 வெற்றி, 5 தோல்வி, 1 ரத்து) 17 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறலாம். ஆனால், கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடையே இரவு 7.30க்கு தொடங்கி நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே ஐதராபாத் 2வது இடத்தில் நீடிக்குமா என்பது தெரிய வரும். கொல்கத்தா அணி ஏற்கனவே முதலிடத்தை (19 புள்ளி) உறுதி செய்துவிட்டது. ராயல்ஸை வீழ்த்தினால் மேலும் 2 புள்ளிகளைப் பெறும்.

அதே சமயம், ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும் குவாலிபயர் 1ல் வெற்றி பெறும் அணி நேரடியாகப் பைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு, 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த அணிகள் மோதும் எலிமினேட்டரில் வெல்லும் அணியுடன் குவாலிபயர் 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

அதனால் தான் 2வது இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில் சிஎஸ்கே – ஆர்சிபி ஆட்டத்தின் முடிவில், புள்ளிப் பட்டியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி முனைப்புடன் சன்ரைசர்ஸ் சவாலை எதிர்கொள்கிறது. பஞ்சாப் வென்றால் 8வது இடம் பிடித்த திருப்தியுடன் விடை பெறலாம்.

The post 2வது இடம் யாருக்கு?: குறி வைக்கும் ஐதராபாத், ராஜஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Hyderabad, Rajasthan ,Hyderabad ,IPL ,Rajasthan ,Sunrisers ,Punjab Kings ,Kolkata ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...