×

இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு

நாகப்பட்டினம்: நாகை-காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து இன்று தொடங்குவதாக இருந்தது நிறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத்தை திருப்பித்தர நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி துவங்கப்பட்டது. இயற்கை சீற்றம் காரணமாக ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்டி ஸ்ரீ என்ற பெயர் கொண்ட தனியார் நிறுவனம் அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பலில் 160க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யலாம் என கூறியது. இதனால் 150க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் திடீரென கப்பல் சேவை வரும் 17ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்ய காத்திருந்த நிலையில் மீண்டும் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இலங்கை செல்ல ஆர்வமுடன் இருந்த பயணிகள் முன்பதிவு செய்த பணத்தை திரும்ப பெறாமல் காத்திருந்தனர். ஆனால் நேற்று திடீரென கப்பல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தவிர்க்கமுடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகளினாலும் கால நிலை மாற்றங்களினாலும் நாகை-காங்கேசன் பயணிகள் கப்பல் சேவையை இயக்கமுடியவில்லை. மிக விரைவில் புதிய பயண தேதிகள் அறிவிக்கப்படும். பயணச்சீட்டை பெற்றவர்கள் கட்டணத்தை முழுமையாக திருப்பி வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் விவரங்களுக்கு customar.car@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளது.

அந்தமானில் இருந்து சென்னை வந்த சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் செல்ல சர்வதேச போக்குவரத்திற்கான சட்டபூர்வமான அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அந்தமானில் ஏற்கனவே இயங்கிய கப்பலை சீர் செய்து நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு இயக்க திட்டமிட்டதால் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சர்வதேச அனுமதி வழங்க முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சில தொழில்நுட்ப காரணங்களால் இலங்கை-நாகை கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டி சில்வா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு appeared first on Dinakaran.

Tags : Nagai- ,Sri Lanka ,Nagapattinam ,Nagai-Kangesan ,Nagai port ,Sri Lanka Kangesan ,Nagai ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...