நெல்லை: ஆடுகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தையை மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர். நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து, பாபநாசம், வி.கே.புரம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் யானை, மிளா, சிறுத்தை, கரடி ஆகியவை ஊருக்குள் புகுந்து, நாய், ஆடு, மாடுகளை கடித்து குதறுவதோடு, விளைநிலங்களில் புகுந்து நெல், கரும்பு பயிர்களையும் சேதப்படுத்துகின்றன. இந்நிலையில் கடந்த 16ம் தேதி அதிகாலை வி.கே.புரம் அருகே வேம்பையாபுரம் சிவசங்கர் (43) என்பவரது வீட்டு முன்பு கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டையும், அனவன்குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது ஆட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆட்டையும் சிறுத்தைகள் தாக்கி, வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து மோப்பநாய் ரெக்ஸ் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு செய்ததில் 2 பகுதிகளிலும் ஆடுகளை இழுத்துச் சென்றது, வெவ்வேறு சிறுத்தைகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 இடங்களிலும் சிறுத்தையை பிடிக்க தலா ஒரு ஆட்டைக் கட்டிப் போட்டு 2 கூண்டுகள் நேற்று முன்தினம் வைக்கப்பட்டன. இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் வேம்பையாபுரத்தில் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இந்த பகுதியில் ஏற்கனவே 7 முறை கூண்டில் சிக்கிய நிலையில் தற்போது 8வது முறையாக சிறுத்தை சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிடிபட்ட சிறுத்தையை மாஞ்சோலையில் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். அனவன்குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை சிக்கவில்லை. இதன் நடமாட்டத்தை மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
The post வனத்துறையினருக்கு ரூட் போட்டு கூண்டில் சிக்க வைத்தது சிறுத்தையை பிடித்த மோப்ப நாய்: பொதுமக்கள் நிம்மதி appeared first on Dinakaran.