×

பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு

சேலம்: இடைப்பாடி அருகே பிளஸ்-1 பொதுத்தேர்வின் போது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பூலாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, பிளஸ்-1 படித்து கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதினார். மார்ச் 13ம் தேதி ஆங்கிலத்தேர்வு எழுதியபோது, அறை கண்காணிப்பாளராக இடைப்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் மாரிமுத்து பணியில் இருந்துள்ளார். அவர், மாணவியை தேவையில்லாமல் தொட்டு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவி, இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு மாணவியின் பெற்றோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீரிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உடனடியாக ஆசிரியர் மாரிமுத்துவை தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து விடுவித்தனர். மாணவியின் பாலியல் புகார் தொடர்பாக சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தேர்வெழுதிக்கொண்டிருந்த மாணவிக்கு ஆசிரியர் மாரிமுத்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) சைமன்ராஜ், சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், அரசு பள்ளி ஆசிரியர் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Eadpadi ,Phoolampatti ,Eadpadi, Salem district ,
× RELATED ₹7 கோடிக்கு ஆடுகள் விற்பனை