×

பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்

புதுடெல்லி: ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் (பிஏ) பிபவ் குமாரை முதல்வரின் இல்லத்தில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மதுபான முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலை சந்திக்க அவரது கட்சி பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13ம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கி, வயிற்றில் உதைத்தோடு, கன்னத்தில் பலமுறை அடித்ததாக மாலிவால் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மாலிவாலை முதல்வரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று நேரில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் மாலிவால் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் இல்லத்திற்கு நேற்று வழக்கமாக பணிக்கு வந்த பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர். முதல்வர் இல்லத்தில் இருந்து அவரை பிற்பகலில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, மாலிவாலை பரிசோதித்த எய்ம்ஸ் குழுவின் மருத்துவ அறிக்கை நேற்று வெளியானது. அதில், மாலிவாலின் இடது காலிலும், வலது கன்னத்தின் தாடைப் பகுதியிலும் காயங்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று தன்னால் நடந்து செல்ல முடியாத நிலையில் இருந்ததாக மாலிவால் புகாரில் கூறியிருந்த நிலையில், முதல்வரின் வீட்டிலிருந்து பெண் பாதுகாவலர்கள் மாலிவாலை வெளியில் அழைத்து வருவது போன்ற புதிய வீடியோ நேற்று வெளியானது. அதில் மாலிவால் நடந்து வருவது போலவும், அவரை வெளியில் அழைத்து வந்த பெண் பாதுகாவலர் ஒருவரின் கையை தட்டி விட்டு மாலிவால் செல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பி உள்ளது. டெல்லி அமைச்சர் அடிசி நேற்று கூறுகையில், ‘‘மாலிவால் முதல்வர் அறைக்கு அத்துமீறி நுழைய முயன்றது ஏன்? சந்திப்பதற்கான முன் அனுமதி பெறாமல் அவர் வந்தது ஏன்? ஒருவேளை கெஜ்ரிவால் அவரை சந்தித்திருந்தால் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டுகள் கெஜ்ரிவால் மீது கூட சுமத்தப்பட்டிருக்கலாம். மாலிவால் மீது சட்டவிரோத ஆட்தேர்வு வழக்கை லஞ்ச ஒழிப்புதுறை பதிவு செய்துள்ளது. இதில் கைது செய்வோம் என்கிற பாஜவின் மிரட்டலுக்கு பயந்துதான் மாலிவால் இவ்வாறு செய்துளளார். இது கெஜ்ரிவாலுக்கு எதிரான பாஜவின் சதி’’ என்றார்.

பாஜவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பொன்னவல்லா அளித்த பேட்டியில், ‘‘ஆம் ஆத்மி பெண்களுக்கு எதிரான கட்சி. முதலில் மாலிவாலை உடல் ரீதியாக தாக்கினர். இப்போது அவரது நற்பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். முதல்வர் அலுவலகத்தின் பல ரகசியங்களை அம்பலப்படுத்திவிடுவார் என்பதற்காக தனது உதவியாளரை காப்பாற்ற கெஜ்ரிவால் விரும்புகிறார்’’ என்றார்.

பாஜ அலுவலகத்துக்கு வருகிறேன்; முடிந்தால் கைது செய்யுங்கள்:” பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘‘ஆம் ஆத்மியை சேர்ந்தவர்களை ஒவ்வொருவராக ஒன்றிய பாஜ அரசு கைது செய்து வருகிறது. முதலில் சஞ்சய் சிங்கை கைது செய்தார்கள். இப்போது எனது பிஏவை கைது செய்துள்ளனர். ராகவ் சதா லண்டனில் இருந்து திரும்பி உள்ளார். அடுத்ததாகஅவரையும் அவரைத் தொடர்ந்து அடிசி, சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என தெரிகிறது. ஏன் எங்களை கைது செய்கிறார்கள்? தரமான அரசு பள்ளிகளையும், ஏழைகளுக்காக மொகல்லா கிளீனிக்குகளையும், 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கியதும் தான் எங்கள் குற்றம். அதற்காகத்தான் எங்களை சிறையில் அடைக்கிறார்கள். இந்த சிறை விளையாட்டை நிறுத்துங்கள் மோடி. ஏன் ஒவ்வொருவராக சிறைக்கு அனுப்புகிறீர்கள்? நாளை (இன்று) பிற்பகல் 12 மணிக்கு பாஜ தலைமையகத்திற்கு எனது கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் அனைவரையும் அழைத்து வருகிறேன். உங்களுக்கு யாரை கைது செய்யணுமோ, முடிந்தால் அவர்களையும் கைது செய்யுங்கள். மொத்தமாக சிறையில் தள்ளுங்கள். எங்களை சிறையில் தள்ளி ஆம் ஆத்மியை நசுக்கி விடலாம் என பார்க்கிறீர்கள். ஆம் ஆத்மி கட்சி சிந்தனை சார்ந்தது. அதை நசுக்க நசுக்க எங்கும் பரவக்கூடியது’’ என கூறி உள்ளார்.

The post பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Chief Minister ,New Delhi ,PA ,Bibhav Kumar ,Delhi Police ,Aam Aadmi Party ,Swati Malival ,Chief Minister of ,Delhi ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...