×

ஊட்டியில் கனமழையால் பாறைகள் சரிந்து விழுந்தன: மலை ரயில் 2 நாட்கள் ரத்து

மேட்டுப்பாளையம்: கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து 2 நாள் ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்கியது. அதுமுதலே நாள்தோறும் அங்கு மழை பெய்து வருகிறது. எனினும், ஒரு சில மணி நேரம் மட்டுமே பெய்வதால் சுற்றுலா பயணிகள் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை முதலே ஊட்டியில் கன மழை பெய்தது.

இதனால், பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மரங்களின் அடியிலும், புல் மைதானத்திற்குள் இருந்தவர்கள் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்குள்ளும் தஞ்சமடைந்தனர். மேலும் பூங்காவை விட்டு ஒரே சமயத்தில் மக்கள் வெளியேறியதால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி சில மணி நேரம் ஊட்டி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழை காரணமாக நீலகிரி மாவட்டம், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் 80 அடியில் இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி அளவுக்கு உயர்ந்து 84.75 அடியானது.

இதனிடையே கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறாங்கற்கள் சரிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மலை ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மலை ரயிலில் ஊட்டி செல்ல உற்சாகத்துடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்த நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ரயில் சேவை வருகிற 20ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊட்டியில் கனமழையால் பாறைகள் சரிந்து விழுந்தன: மலை ரயில் 2 நாட்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Ooty ,Mettupalayam ,Ooty, Nilgiri district ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது