×

ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை நுகர்வோர் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்: மின்வாரிய அதிகாரி தகவல்

சென்னை: மென்பொருள் கோளாறு காரணமாக, ரத்து செய்யப்பட்ட மின் இணைப்புகளுக்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டணத்தை நுகர்வோர் திரும்ப பெறலாம் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்தின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. இதில் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கிட வீடுகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மீட்டர்களில் பதிவாகும் அளவுகளை மின் வாரிய பணியாளர்கள் கணக்கெடுத்து நுகர்வோருக்கு மின் அட்டையில் குறிப்பிடுவர்.

மேலும், அந்த தரவுகளை கணினியிலும் பதிவேற்றம் செய்வர். இதன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு தங்கள் கட்டண விவரம் தெரிவிக்கப்பட்டு மின் கட்டணம் செலுத்தப்படும். ஆன்லைனில் செலுத்தாமல் நேரில் மின் கட்டணம் செலுத்துபவர்களும் மின் கட்டணம் செலுத்தியதை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் மின் வாரியம் கட்டணம் செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்கள் மீது இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும். இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கட்டணத்தை மின்வாரியத்தின் மென்பொருள் கணக்கிட்டுள்ளதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நுகர்வோர் ஒருவர் கூறுகையில், ‘‘2022ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு கட்டணம் கணக்கிடப்பட்டிருந்தது, அதை கவனிக்காமல் பணம் செலுத்திவிட்டேன். ரசீதை படித்தபோதுதான் ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு கட்டணம் செலுத்தியதை உணர்ந்தேன். மின் பயன்பாடு கட்டணம், தாமதமாக செலுத்தியதற்கான அபராதம் மற்றும் மறு இணைப்புக் கட்டணம் என ரூ.764 செலுத்தினேன். ரத்து செய்யப்பட்ட இணைப்புகளுக்கு மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மறு இணைப்பு கட்டணம் செலுத்தியதால், சேவை இணைப்பு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது’’ என்றார்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கட்டணம் செலுத்த தவறிய நுகர்வோர்களின் இணைப்புகளை மின் வாரியம் தற்காலிகமாக நிறுத்துகிறது. சிலர் தற்காலிக துண்டிப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். ஜனவரியில், கட்டணம் நிலுவையில் உள்ள இணைப்புகளுக்கான கட்டணத்தை கணக்கிடவும், அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கு மறு இணைப்புக் கட்டணங்களை விதித்து மீண்டும் இணைப்புகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மென்பொருள் கட்டமைக்கப்பட்டது. ஆனால் மென்பொருள் நிரந்தரமாக நிறுத்தப்பட்ட இணைப்புகளுக்கான கட்டணத்தை கணக்கிட்டுள்ளது. இதில் எந்தெந்த இணைப்புகளுக்கு கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது, எத்தனை இணைப்புகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என்பது தெரியவில்லை. ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்தியவர்கள், மின் வாரியத்தின் வருவாய் பிரிவுக்கு தெரிவித்து பணத்தை திரும்பப் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ரத்து செய்யப்பட்ட இணைப்புக்கு கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை நுகர்வோர் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்: மின்வாரிய அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,CHENNAI ,power board ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Tamil Nadu Electricity Board ,Dinakaran ,
× RELATED மழையின்போது மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்