×

அடுத்த பஸ் எப்போ வரும்? பஸ் ஸ்டாப் டிஜிட்டல் போர்டில் எல்லாம் தெரியும்

சென்னை: சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளின் விவரம் குறித்து அறிய டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் 659 வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 3,436 பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் தினமும் 35 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்நிலையில் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்த போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் பலகைகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்தின் வருகை நேரம், வழித்தடம், எத்தனை நிமிடங்களில் அடுத்த பேருந்து வரும் என்பது உள்ளிட்ட தகவல்கள் இருக்கக் கூடிய வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் சோதனை முயற்சியாக சென்னையில் அண்ணாசாலை, கோடம்பாக்கம், எழும்பூர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகைகள் முதற்கட்டமாக பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகரில் சோதனை முயற்சியாக முதற்கட்டமாக 532 பேருந்து நிறுத்தங்களில் இந்த டிஜிட்டல் பலகைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல்கள் இடம்பெறும். அடுத்தப் பேருந்து எப்போது வரும், எத்தனை நிமிடத்தில் பேருந்து நிலையத்தை வந்தடையும் என்ற தகவலும், பேருந்தின் வழித்தட நம்பர் மற்றும் எந்தப் பேருந்து வருகிறது என்ற தகவலும் இடம் பெறும். பேருந்தில் உள்ள ஜிபிஎஸ் கருவியுடன் இந்த டிஜிட்டல் பலகை இணைக்கப்படுகிறது. மேலும் சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் இருந்து இச் சேவையானது கண்காணிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் இந்த டிஜிட்டல் பலகையானது செயல்படும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பயணிகளின் வரவேற்பை பொறுத்து இதனை கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் செயல்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

The post அடுத்த பஸ் எப்போ வரும்? பஸ் ஸ்டாப் டிஜிட்டல் போர்டில் எல்லாம் தெரியும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Transport Corporation ,Dinakaran ,
× RELATED சென்னையில் கதவு இல்லாத 448...