×

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம்

சென்னை: திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கூட்டம் கடந்த 17ம் தேதி காணொலிக்காட்சி வாயிலாக, மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரும் ஜூன் 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் திமுக கொடியேற்றி, எளியோர்களுக்கு பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், கல்வி உதவித் தொகை வழங்குதல், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்று, 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

கலைஞர் சமூகநீதி பார்வை, சமத்துவ கொள்கை, லட்சியம், சிறப்புகள், ஆட்சி நிர்வாகத் தன்மை, புரட்சிகரமான திட்டங்கள், உருவாக்கிய கட்டமைப்புகள் போன்ற தலைப்புகளில், வரும் ஜூன் மாதத்தில் தினமும் இரவு 7 மணிக்கு, இரண்டு, மூன்று நபர்கள் வீதம் மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் உரையாற்றும் வகையில், மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் சிறப்புரையுடன் எக்ஸ்-சமூக வலைதளத்தின் “ஸ்பேஸ்” நிகழ்ச்சியில் உரையாற்ற தீர்மானிக்கப்படுகிறது. கலைஞர் நூற்­றாண்டு விழாவின் தொடக்கத்தில் “மாணவ நேசன் முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” எனும் தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதற்கு மாணவர் அணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தல் பணி காரணமாக வரும் ஜூன் மாதத்தில் மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்துவதெனவும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் “மாணவ நேசன் முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” எனும் தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களான கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் 12ம் வகுப்பு பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் “தமிழ் மாணவர் மன்றம்” அமைப்பை உருவாக்கி, புதிய உறுப்பினர்களை சேர்த்து, இந்த கல்வியாண்டிற்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியை விரைவாக தொடங்க மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை கூட்டம் வலியுறுத்துகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் சூறாவளியாய் சுழன்றடித்த திமுக தலைவர்- முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மாணவர் அணி நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா.புகழேந்தி, மாணவர் அணியின் துணைச் செயலாளர் அதலை பி.செந்தில்குமார் தந்தையார் எம்.பிச்சை சேர்வை, முதல்வரின் தனிச் செயலர் தினேஷ்குமார் தந்தை டி.வி.ரவி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், ஜெ.வீரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநில மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,DMK student team ,CVMP ,Ezhilarasan MLA ,Dinakaran ,
× RELATED ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்,...