×

திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள்: பக்தர்களுக்கு தோளில் எரிச்சல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் மிதப்பதால் பக்தர்கள் கவனமாக குளிக்க கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் புனித நீராடிவிட்டு தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்த நிலையில், காலநிலை மாற்றத்தால் கடல் நீர்மட்டத்தில் மாறுதல் ஏற்படுகிறது. சில நேரம் கடல் நீர்மட்டம் உள்வாங்கியும் கரையை ஒட்டி வெளியேறியும் என அவ்வப்போது வித்தியாசமாக காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில், காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள் தற்போது திருச்செந்தூர் கடற்கரையில் காணப்படுகிறது.

பக்தர்கள் புனித நீராடும் கரையோரம் வரைக்கும் வந்து விடுகிறது. இது பார்ப்பதற்கு நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போல இருப்பதால் பக்தர்கள் அதனை பாசி என்றும் பஞ்சு என நினைத்தும் தொட்டு விடுகின்றனர். அதில் ஒரு சில வகை ஜெல்லி மீன்கள் பக்தர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது. இந்த மீன்கள் கடித்தவுடன் கை, கால்களில் ஊரல் மற்றும் தடுப்புகள் வந்து சிவப்பு நிறமாகி விடுகிறது. எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இதனால் பக்தர்கள் குளிக்கும் போதும் கால் நனைக்கும்போதும் ஜெல்லி வகை மீன்களை கண்டால் அவற்றை கைகளால் தொட வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே கடலோர பாதுகாப்பு குழுவினர் கடலில் மிதந்த ஜெல்லி மீனை கொண்டு வந்து இணை ஆணையர் கார்த்திக்கிடம் காட்டினர். இதுகுறித்து கோயில் இணை ஆணையர் கார்த்திக் கூறுகையில், ‘‘திருச்செந்தூர் கோயில் கடல் பகுதியில் காணப்படும் ஜெல்லி மீன்கள் குறித்தும் அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் வள்ளி குகை அருகே மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. சில நாட்களாக ஜெல்லி மீன் கடிப்பதால் பாதிக்கப்படும் பக்தர்கள் மருத்துவ மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு தேவையான மருந்துகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள்: பக்தர்களுக்கு தோளில் எரிச்சல் appeared first on Dinakaran.

Tags : Tricendoor ,Trincomore ,Tricendore ,Murugan ,temple ,Tiruchendur ,Thiruchendur ,
× RELATED திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி...