×

கருவேல மரங்களை அகற்றி சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று அணையை பலப்படுத்த வேண்டும்

சேத்தியாத்தோப்பு : கருவேல மரங்களை அகற்றி சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று அணையை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சேத்தியாத்தோப்பு வெள்ளாறு மற்றும் வீராணம் ஏரியும் கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறும், ஏரியும் ஆகும். வெள்ளாறு மற்றும் வீராணம் ஏரியை கொண்டு சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மறைமுகமாக சில கிராமங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது வெள்ளாறு நீர்வரத்தின்றி வறண்டு வருகின்றது.

பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் வெள்ளாற்றில் போடப்பட்டுள்ள போர்வெல்கள் மூலம் குடிநீர் ஆதாரமாக இரண்டு கிணறுகள் மூலம் குடிநீர் பெறபட்டு வருகின்றது. பொதுப்பணித்துறையினர் ஆற்றின் அணையை சரிவர பராமரிக்காததால் சென்னிநத்தம் மற்றும் கிளாங்காடு கிராம வளைவு வரை அணைநெடுகிலும் கருவேல மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளது.

பல இடங்களில் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது மேற்கே உள்ள மணிமுத்தாறு, திருக்கூடலையாத்தூர் மற்றும் சுற்றுபுற வாய்க்காலில் இருந்து வடிகாலாகும் வெள்ளநீர் ஒரு லட்சம் கனஅடி வரை சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாலத்தின் வழியே வெளியேறி பரங்கிபேட்டை கடலில் சென்று கலந்துவிடும். தற்போது அணையில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால் வரும் மழைக்காலங்களில் கிராமங்களில் மழை வெள்ளநீர் புகுந்து குடியிருப்புகள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஆற்றின் வடக்கு பகுதிகளான சென்னிநத்தம், கிளாங்காடு, கிராம வெள்ளாற்று கரைகளின் உடைப்பை சரிசெய்து கருவேல மரங்களை அகற்றினால் குடியிருப்பு பகுதிகள் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தெற்கு சென்னிநத்தம், கிளாங்காடு வெள்ளாற்று பகுதிகளின் கரையை உயர்த்தி சமன்படுத்தி பொதுமக்கள் நலன்கருதி அணையின் வளைவு பகுதி வரை கருங்கள் பதித்து படித்துறை அமைக்க வேண்டும் என்றும்.

என்.எல்.சி. நிர்வாகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் என்.எல்..சி.யின் உபரி நீரை பரவனாறு வழியாக வடக்கு ராஜன் வாய்க்காலில் விட்டு சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் விட்டும் தேக்கிவைக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். இதனால் நீர்மட்டம் உயர்ந்து சுற்றுபுற விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று விவசாயம் செழிக்கும் என தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் என்.எல்.சி.யின் உபரி நீரை வெள்ளாற்றில் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளாற்றங்கரைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கருவேல மரங்களை அகற்றி சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று அணையை பலப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chethiyathoppu Vellaru Dam ,Chethiyathoppu ,Chethiyathoppu Vellaru ,Veeranam Lake ,Cuddalore district ,Vellaru ,Oakwood ,Chetiyathoppu Vellaru Dam ,
× RELATED அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்...