×

மழை வெள்ளத்தில் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் ஏரல் உயர்மட்ட பாலத்தின் தடுப்பு சுவரால் விபத்து அபாயம்

*அகற்றிட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ஏரல் : மழை, வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலை சீரமைக்கப்படாத நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள தடுப்பு சுவரை உடனடியாக அகற்றிட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின்கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

மழை வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகள், ஆற்றின் கரையோரப் பகுதி உடைப்புகளை அரசு விரைவாக சீரமைத்து வருகிறது. ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைப்பு சாலை உடைந்தது. இதனால் அருகிலுள்ள பழைய தாம்போதி பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்து நடந்து வருகிறது. புதிய பாலம் சேதமடைந்து 5 மாதங்களாகியும் எவ்வித சீரமைப்பு பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் திருவழுதிநாடார்விளைக்கு ஆற்றங்கரையோர பாதையும் சேதமடைந்ததால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழையால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தாம்போதி பாலம் மீண்டும் உடைந்து போக்குவரத்து துண்டிக்கபடும். ஏரல் புதிய பாலம் இணைப்பு சாலையோரத்தில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்பு சுவரும் சேதமடைந்து சரிந்த நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே தாம்போதி பாலத்தில்தான் போக்குவரத்து நடந்து வருவதால் தடுப்புச்சுவர் விழுந்து உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த தடுப்பு சுவரை அகற்றுவதுடன், உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலையையும் தொடங்கிட வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்

ஏரல் முஸ்லிம் வணிகர் நலச்சங்கம் தலைவர் பாக்கர்அலி, கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கடந்த டிசம்பரில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏரல் உயர்மட்ட பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள இணைப்பு சாலை பாதிக்கப்பட்டு பாலம் அந்தரத்தில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனருகில் உள்ள தாம்போதி பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், சேர்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த தடுப்புச்சுவரை அகற்றி, மழைக்காலத்திற்கு முன்னதாக பணியை முடித்து போக்குவரத்தை தொடங்கிடவும் அரசு உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறியுள்ளார்.

The post மழை வெள்ளத்தில் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் ஏரல் உயர்மட்ட பாலத்தின் தடுப்பு சுவரால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Arel High Level Bridge ,Eral ,level ,Nellai ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED ஏரல், உமரிக்காடு அரசு பள்ளிகளில்...