×

சேலம் அரசு மருத்துவமனையில் போதைக்காக சொல்யூஷன் பயன்படுத்திய மாணவன் பலி

*போலீசார் விசாரணை

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் போதைக்காக சொல்யூஷன் பயன்படுத்திய பள்ளி மாணவன் பலியானதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ஒரிச்சேரிப்புதூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கௌதம் (16). தளவாய்ப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து 319 மதிப்பெண் பெற்றுள்ளான். விடுமுறையில் வீட்டில் இருந்த கௌதம் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்த அவரது தாயார் அம்சா மற்றும் சகோதரியிடம் கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளான்.

இதனால் அருகில் இருந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்று இரவு முழுவதும் கௌதம் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து பவானி அரசு மருத்துவமனைக்கு சென்றவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால், சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் கௌதம் நேற்று அதிகாலை காலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் போதைப்பொருள் பயன்படுத்தியதால் கௌதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக தகவல் பரவியது. ஒரிச்சேரிப்புதூர் அருகே உள்ள கரட்டூர் காலனி பகுதியில் உள்ள அவரது நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் மற்றும் சொல்யூஷன் பயன்படுத்தியுள்ளான். அதிக போதை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவன் இறந்ததாக கூறப்படுகிறது. விஷமிகள் சிலர் இப்பகுதியை குறி வைத்து போதை வாஸ்துகளை விற்று வருகின்றனர்.

எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. போதை பொருள் பாதிப்பால் மாணவன் இறந்தானா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் போதைக்காக சொல்யூஷன் பயன்படுத்திய மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,Salem ,Appakodal Orcheriputhur ,Gandhinagar ,Andhiur, Erode district ,Dinakaran ,
× RELATED சேலம் ஜி.ஹெச்சில் பணியில் இருந்த...