×

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. கால்நடைகளை தொடர்ந்து சிறுத்தை வேட்டையாடி வந்ததாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி உள்ளது.

அதேபோல், களக்காடு – முண்டந்துறை புலிகள் சரணாலயமும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, மான் உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகளும் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் விக்ரமசிங்கபுரத்தை அடுத்த வேம்பையாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் (மே 16) இரவு நேரத்தில் விவசாயி ஒருவரின் ஆட்டை சிறுத்தை வேட்டையாடி மலைப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது. தொடர்ந்து காலையில் எழுந்து பார்த்த போது ஆடு காணாமல் போனதை அறிந்த உரிமையாளர் ஆட்டை தேடி பார்த்துள்ளார். அப்போது வழி நெடுகிலும் கிடந்த ரத்தத்தை பார்த்து அதனைப் பின்தொடர்ந்து சென்று தேடி பார்த்த போது ஆட்டின் உடல் பாதியாக சிறுத்தை குதறிய நிலையில் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்கு மூன்று இடங்களில் கூண்டு வைத்தனர். மேலும் ட்ரோன் மூலம் சிறுத்தையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று (மே 18) அதிகாலையில் வேம்பையாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. பின்னர் பிடிபட்ட சிறுத்தையை அடர் வனப்பகுதியில் கொண்டு விட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Ambasamutram ,Vembayapuram ,Nella district ,Babanasam ,Wickramasingapuram ,Nelly ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே...