×

மழையால் ரத்து, வெற்றி, நூலிழை தோல்வி… எதுவாக இருந்தாலும் சென்னைக்கு வாய்ப்பு: ‘18 ரன் அல்லது 11 பந்து’ சிக்கலில் ஆர்சிபி

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 17வது சீசன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
சென்னையில் கடந்த மார்ச் 22ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் நாளையுடன் முடிவடையும் நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. கொல்கத்தா முதலிடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில்… இன்றும் நாளையும் நடைபெறும் லீக் ஆட்டங்களின் முடிவுகள் 2வது, 3வது, 4வது இடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும்.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணியை உறுதி செய்வதற்கான பலப்பரீட்சையில் இன்று பெங்களூரு – சென்னை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இதுதான் கடைசி லீக் ஆட்டம். தோனி வழிகாட்டுதலில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வென்றால் 2வது, 3வது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. மழையால் ஆட்டம் ரத்தாகி தலா 1 புள்ளி வழங்கப்பட்டாலும், கடைசி வரை போராடி நூலிழையில் தோற்றாலும் கூட சென்னை அணி முன்னேறலாம்.

அதே சமயம், டு பிளெஸ்ஸி தலைமையிலான ஆர்சிபி அணி ‘கட்டாய வெற்றி’ என்ற நெருக்கடி மட்டுமல்லாது, சென்னை அணியை குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் அல்லது சேசிங்கில் 11 பந்துகளை மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்த வேண்டும் (உதாரண ஸ்கோர் / இலக்கு: 200 ரன்) என்ற இடியாப்ப சிக்கலுடன் களமிறங்குகிறது. அதற்கு வருண பகவான் கருணை மிக மிக அவசியம். நடப்பு தொடரில் ஆர்சிபி அணியின் பயணம்… சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவைக்கு நிகரானது என்றால் மிகையல்ல.

தொடரின் தொடக்க லீக் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் சென்னையிடம் மண்ணைக் கவ்விய ஆர்சிபி, 2வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தியது. அதன் பிறகு தொடர்ச்சியாக அரை டஜன் தோல்வி! அவ்வளவுதான், பெங்களூரு கதை முடிந்தது என அனைவரும் முடிவு கட்டிய நிலையில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் தொடர் வெற்றி. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இன்னமும் தக்கவைத்துள்ள அந்த அணி, சிஎஸ்கே சவாலை இன்று முறியடித்து சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மழையால் நமத்துப் போகாமல் இருந்தால், இந்த தொடரின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த லீக் ஆட்டமாக அமைந்துள்ள இன்றைய போட்டியில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் மோதிய 32 ஆட்டங்களில் சென்னை 21-10 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* கடைசியாக மோதிய 5 போட்டியிலும் கூட சென்னை 4-1 என முன்னிலை வகிக்கிறது.
* சென்னையில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
* அதிகபட்சமாக சென்னை 226, பெங்களூரு 218 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக சென்னை 82, பெங்களூரு 70 ரன் எடுத்துள்ளன.

The post மழையால் ரத்து, வெற்றி, நூலிழை தோல்வி… எதுவாக இருந்தாலும் சென்னைக்கு வாய்ப்பு: ‘18 ரன் அல்லது 11 பந்து’ சிக்கலில் ஆர்சிபி appeared first on Dinakaran.

Tags : Chennai ,RCB ,Bengaluru ,Royal Challengers ,Bangalore ,Chennai Super Kings ,IPL ,Dinakaran ,
× RELATED கனமழை எதிரொலி.. வரத்து குறைவால்...