×

ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன் மனுவை நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: மக்களின் சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகிறது என்று கூறிய உச்சநீதிமன்றம், மதுபான கொள்கை வழக்கில் கைதான தொழிலதிபரின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில், தொழிலதிபர் அமன்தீப் சிங் தால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் பல முறை ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது அவரது மனு ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கில் அமன்தீப் சிங் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய்,சந்தீப் மேத்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமன்தீப் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல்,‘‘ மனுதாரரின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் 40 முறை விசாரிக்கப்பட்ட பின்னர் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 40 முறை நடந்த விசாரணைக்கு பிறகும் அவரது ஜாமீன் மனு குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை’’ என்றார். இதை விசாரித்த நீதிபதிகள்,‘‘ மக்களின் சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் ஒவ்வொரு நாளும் முக்கியமானது. கிட்டத்தட்ட 11 மாதங்களாக ஜாமீன் வழக்கை நிலுவையில் வைத்திருப்பது மனுதாரரின் சுதந்திரத்தை பறிக்கிறது. எனவே கோடை விடுமுறைக்கு முன்னதாக ஜாமீன் மனு பற்றி முடிவு செய்ய உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிடுகிறோம்’’ என்றனர்.

The post ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன் மனுவை நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi High Court ,New Delhi ,Delhi ,Amandeep Singh ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...