×

பைக் திருடர்களை பிடிக்க ‘ஜியோ டேக்’ புது திட்டம்

கோவை: கோவை நகரில் கடந்த ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போய்விட்டது. சமீப காலமாக வாகனங்களை திருடும் நபர்கள் அவற்றை வெளியூர் கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இரு சக்கர வாகன திருடர்கள் எளிதில் போலீசில் சிக்காமல் நூதனமாக தப்பி விடுகின்றனர். வாகனங்களை தவிர இவர்கள் வேறு திருட்டில் ஈடுபடாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாகனங்களை திருடி செல்லும் நபர்கள் யார், எந்த இடங்களில் போதுமான பாதுகாப்பின்றி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது? என மாநகர போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனை வளாகம், பீளமேடு மால் பகுதி ரோடு, பிரபல கல்லூரி பகுதி, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என 4 இடங்களில் அதிக வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த 4 இடங்களில் மாநகர போலீசார் ஜியோ டேக் என்ற புவியியல் அடிப்படையிலான கண்காணிப்பு திட்டத்தை அமலாக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடக்கிறது. இங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்தும், என்ன வகையான வாகனங்கள், எப்படி வாகனங்களை திருடுகிறார்கள் போன்ற விவரங்கள் ஆய்வு செய்யப்படும்.

மேலும் இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்தும் வாகன திருடர்களை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்து வருகின்றனர். குறிப்பிட்ட சில வகையான வாகனங்கள் அதிகமாக திருடப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த வாகனங்கள் திருட்டின் பின்னணியில் உள்ள கும்பலை மொத்தமாக மடக்க போலீசார் தயாராகி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் கோவையில் திருடப்பட்ட வாகனங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் விற்கப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது. திருட்டு வாகனங்களை எவ்வித ஆவணங்களும் இன்றி சிலர் வாங்கி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

The post பைக் திருடர்களை பிடிக்க ‘ஜியோ டேக்’ புது திட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...