×

நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர வேண்டாம் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் அருணா ஊட்டியில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் கலெக்டர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதாரத்துறையும் உஷார் நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் விநியோகிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தேவையற்ற பயணங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அவசிய மற்றும் அவசர பயணங்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நீலகிரிக்கு மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும். மழை பாதிப்புகளுக்கான அவசர உதவிகளுக்கு 1077, 1950 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Ooty ,Neelgiri district ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே...