×
Saravana Stores

லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லஞ்சம் பெற்றுக் கொண்டு குழந்தைகள் நல குழு உறுப்பினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பெண் வழக்கறிஞரும், அவரது கணவரான தைராய்டு மருத்துவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  இந்நிலையில், 13 வயது மகனை யார் வளர்ப்பது என்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை நிலவி வந்தது.

இந்நிலையில், மகன் அளித்த புகாரின் அடிப்படையில், தாய் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், போக்சோ வழக்குப் பதிவு செய்வதற்காக குழந்தைகள் நல குழு உறுப்பினருக்கு கூகுள் பே மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லஞ்சமாக கொடுக்கப்பட்டது.

இதனை பெற்றுக்கொண்ட பின்னரே போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், சிறுவனின் தந்தையிடம், குழந்தைகள் நல குழு உறுப்பினர் செல்வி பாஸ்கர் லஞ்சம் பெற்றதை உறுதி செய்துள்ளார். லஞ்சம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்று வாதிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுவனின் தந்தையிடம் இருந்து குழந்தைகள் நல குழுவின் உறுப்பினர் லஞ்சம் வாங்கியுள்ளதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்துள்ளார்.

குழந்தைகள் நல குழுவின் தவறான வழிகாட்டுதல் அடிப்படையில் முறையாக விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்து. எனவே, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் உரிய அதிகாரியை நியமித்து, மேல் விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Madras High Court ,CHENNAI ,Child Welfare Committee ,Virugampakkam, Chennai ,welfare ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED குரங்குக் குட்டியை பார்வையிட மருத்துவருக்கு அனுமதி: ஐகோர்ட்