×

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயம் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பல்கலை பதிவாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சுற்றறிக்கை

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டை கட்டாயம் ஒதுக்க வேண்டும் எனஅனைத்து மாநில பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் நாகராஜன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும்போது, அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டு குழப்பம் அடையும் சூழல் ஏற்படுகிறது.

உதாரணமாக அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு சில குறிப்பிட்ட மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அதனை கொண்டே உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துவிடுகிறார்கள். ஆனால் உயர்கல்வி நிறுவனங்களில் கண் தெரியாதவர்கள், பார்வை குறைபாடுடையவர்கள், தொழுநோயில் இருந்து குணமானவர்கள், காது கேளாதவர்கள், ஆசிட் திரவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் நாகராஜன், அனைத்து மாநில பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016, பிரிவு 32-ன்படி, உயர்கல்வி நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்களில் 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் ஒதுக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான படிப்புகளை கேட்கும்போது அதனை வழங்குவதற்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடு செய்யக்கூடாது.

உதாரணமாக, திரைப்பட எடிட்டிங் டிப்ளம்போ படிப்பில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவருக்கு வழங்காமல் விலக்கி கொள்ள முடியும். ஆனால் குறைந்த பார்வைத்திறன் உடையவர்கள் அதற்கான உதவி சாதனங்களை பயன்படுத்தி படிப்பை தொடர முடியும். அவர்களுக்கு வழங்காமல் இருக்கக் கூடாது. தேர்வு நேரத்தில் அவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குதல், 2 அல்லது 3-ம் மொழி படிப்புகளில் இருந்து விலக்கு போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றங்களை செய்யவேண்டும்.

The post உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயம் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பல்கலை பதிவாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Government ,Disabled ,Welfare ,Nagarajan ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...