×

மன உளைச்சலா உயர்கல்வி குறித்த சந்தேகமா? மாணவர்களுக்கு வழிகாட்ட இலவச அழைப்பு மையம் 14417க்கு டயல் பண்ணுங்க… பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இவற்றில் 12ம் வகுப்பில் 95.49 சதவிகிதமும், 10ம் வகுப்பில் 91.55 சதவிகிதமும் என முன்பு இல்லாத வகையில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதை தொடர்ந்து, உயர்க்கல்விக்கான தேடல்களில் தங்களை ஈடுபடுத்தி பலரும் நீட் தேர்வை எழுதியுள்ளனர். இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவுகளும் தொடங்கப்பட்டு மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.

ஆனாலும், குறைந்த மதிப்பெண், என்ன படிப்பது, இந்த மதிப்பெண்ணுக்கு என்ன கோர்ஸ் கிடைக்கும் உள்ளிட்டவை குறித்த புரிதல்கள் இல்லாமல் பலரும் திணறுகிறார்கள். அவர்களுக்காகவே பள்ளிக் கல்வித்துறையின் உதவி மையம் தனித்துவமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த இலவச அழைப்பு மையம்.

கடந்த 2018ம் ஆண்டு, தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்காக கொண்டுவரப்பட்ட பிரத்யேக இலவச அழைப்பு எண் ‘14417’. பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைத்தல், உயர் கல்விக்கு ஆலோசனை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த இலவச அழைப்பு மையம் வழங்கி வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மையம் செயல்படுகிறது. வரும் அழைப்புகளை செவிமடுப்பது, முக்கியமான ஐயங்களுக்கு போதிய விளக்கம் அளிப்பது ஆகியவற்றுக்காக இங்கே அதற்கென பயிற்சி பெற்றோர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

கல்வித் தகவல் மையம் என்ற பெயரில் செயல்பட்ட இந்த உதவி மையத்தில், உயர் கல்வி தொடர்பான விளக்கங்களுக்கு அப்பால், மாணவர்களின் மன அழுத்தம், மனச்சோர்வு தொடர்பான சங்கடங்களுக்கும் தொலைபேசி வாயிலாகவே கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. இவற்றின் மூலம் விரக்தி மற்றும் தற்கொலை எண்ணம் நிரம்பியவர்கள் விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கவும் முடிந்தது.

கொரோனா உச்சத்திலிருந்தபோது பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்ற முடிவை எட்டுவதற்காக, பெற்றோர்கள் தொடர்பு கொள்வதற்கான எண்ணாகவும் 14417 பெரும்பங்கு வகித்தது. அப்போது இரண்டே நாளில் சுமார் 40 ஆயிரம் அழைப்புகள் இந்த மையத்துக்கு குவிந்துள்ளது. அடுத்தகட்டமாக, தற்போது பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் உதவி எண்ணாகவும் 14417 சேர்க்கப்பட்டது.

இந்த எண் குறித்து பள்ளிகள், வகுப்பறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு பிள்ளைகளின் பாடநூல்களிலும் அவை அச்சேறின. மாணவ, மாணவியர், பெற்றோர் மட்டுமன்றி பொதுநல ஆர்வலர்களும் இந்த எண்ணை அழைத்து விளக்கங்கள் பெற்று வருகிறார்கள். போக்சோ சட்டம் தொடர்பான விளக்கங்கள், பொதுமக்கள் மத்தியிலான போக்சோ அச்சுறுத்தல்கள் குறித்தும் ஐயங்கள், புகார்களுக்கான அழைப்புகள் வருகின்றன.

உயர்கல்வி ஆலோசனை மற்றும் தற்கொலை மனநிலை தொடர்பான அழைப்புகள் வழக்கம்போல அதிகரிப்பதால், அவற்றுக்கான ஆலோசனைகளையும் இந்த மையத்தினர் வழங்கி வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய 14417 அழைப்பு மையத்தின் தலைமை அதிகாரி சில்பி, {கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 8 சதவிகித அழைப்புகள் அதிகமாக வருகிறது. அவற்றில் மாணவர்களிடமிருந்து வரும் அழைப்புகள் தான் அதிகம்.

மன உளைச்சல், உயர்கல்வி தொடர்பான சந்தேகம் என மாணவர்கள் பலரும் எங்களை தொடர்பு கொள்கிறார்கள். 12ம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண் இவ்வளவு, இதற்கு என்ன படிக்கலாம். எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம். எனக்கு இதில் ஆர்வம் உள்ளது, ஆனால் மதிப்பெண் குறைவாக உள்ளது உள்ளிட்ட பல சந்தேகங்களை கேட்கிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் எங்கள் ஆலோசகர்கள் மூலம் வழங்கப்படுகிறது. மன குழப்பம், மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு மன நல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு முறையான தீர்வு காணப்படுகிறது.

எங்களுக்கு வந்த அதிகமான போன் கால், ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறார்கள், பள்ளி கட்டணம் அதிகம் வசூலிப்பது போன்றவைதான். அவற்றை சம்பந்தப்பட்ட வட்டார அலுவலர்களுக்கு தெரியப்படுத்துவோம். அவர்கள் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்து எங்களுக்கு ரிபோர்ட் கொடுப்பார்கள். எங்களுக்கு வரும் அழைப்புகளை தாண்டி, நாங்களும் 10 மற்றும் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போன் செய்து ஆலோசனை வழங்குவோம்.

தற்போது அவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. மனம் தளராமல் மறு தேர்வுக்கு அவர்களை விண்ணப்பிக்கக்கோரியும், தேர்வுக்கு ஆயத்தமாகவும் அவர்களை ஊக்குவித்து வருகிறோம். தற்போது உள்ள மாணவர்களுக்கு புரிதல் உள்ளது. அதனால்தான் அவர்களே போன் செய்து தங்களுடைய சந்தேகங்களை கூறி அவர்களே ஆலோசனை கேட்கிறார்கள். மேலும் நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை பெறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான அழைப்புகளுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

2 குழந்தை திருமணம் தொடர்பாக மக்களுக்கு அதிகம் தெரிந்த 1098 என்ற எண்ணுக்கு அதிக அழைப்புகள் செல்கின்றன. அதனால் பள்ளிக்கல்வித்துறையின் 14417க்கு மாதம் 50 அழைப்புகள் வருகிறது.

3 மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு அழைப்புகள் மூலம் கடந்த ஆண்டில் இடைநிற்றல் ஆன 6 ஆயிரம் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

The post மன உளைச்சலா உயர்கல்வி குறித்த சந்தேகமா? மாணவர்களுக்கு வழிகாட்ட இலவச அழைப்பு மையம் 14417க்கு டயல் பண்ணுங்க… பள்ளி கல்வித்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறக்கும் போது பின்பற்றப்பட...