×

வாட்ஸ் அப்பிலும் இனி மின் கட்டணம் செலுத்தலாம்

சென்னை: வாட்ஸ் அப் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்து வருகிறது. இதில் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன் பின்னர் தொழில்நுட்பம் வளர வளர இணையதளத்தின் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ஆன்லைன் பேங்கிங் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த போன்பே மற்றும் கூகுள் பே போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தவறாமல் பணம் செலுத்தும்படியும் உரிய தேதியில் நினைவூட்டும்படியும் அதில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருந்ததால் பயனர்களுக்கு வசதியாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதில் 500 யூனிட்டுகளுக்கும் மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரியம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம். தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐவாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் செய்தி வசதி அறிமுகம். பாதுகாப்பு குறிப்பு: வாட்ஸ்அப் செய்தி டான்ஜெட்கோ லச்சினை மற்றும் பச்சை குறியீடு, எண் 94987 94987 உறுதி செய்யவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வாட்ஸ் அப்பிலும் இனி மின் கட்டணம் செலுத்தலாம் appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Chennai ,Tamil Nadu Electricity Board ,Dinakaran ,
× RELATED வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம்...