×

தீவிர கனமழை பெய்யும் வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை: கேரளாவில் மே 31ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் தீவிர கனமழையும் பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக 20ம் தேதி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 21ம் தேதி வரை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நடசத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் கடந்த வாரங்களில் 111 டிகிரி வரை உச்சநிலைக்கு சென்றது. வட மாநிலங்களில் 115 டிகிரி என்ற அளவில் உச்சம் தொட்ட வெயில் தமிழ்நாட்டிலும் அதிகபட்ச உச்ச அளவை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தில் உருவான காற்று சுழற்சி கோடை மழைக்கு வழி வகுத்தது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மன்னார் வளைகுடா மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல காற்று சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கோடை மழை பெய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, மே 31ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்குவதற்கான சாதகமான நிலையும் உருவாகியுள்ளது. அதன் முன்னோட்டமாக மே 20ம் தேதி கேரளாவில் மிக மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் 20ம் தேதி அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மே 20ம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 20ம் தேதி மிக மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால், 20ம் தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக 20 செமீ வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், அங்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்தது.

நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இருப்பினும் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் நிலவியது. கரூர், திருச்சி 97 டிகிரி, சென்னை 90 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் 90 டிகிரி மற்றும் அதற்கும் கீழ் வெயில் இருந்தது. அதனால் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* மே 20ம் தேதி தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

* கன்னியாகுமரி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

* பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

The post தீவிர கனமழை பெய்யும் வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kerala ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கேரளா, லட்சத்தீவு பகுதிகளில்...