×

திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தர்மாபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதி அன்று கொடியேற்றி விழா நடத்தப்படும். அதிலிருந்து 22 நாட்களுக்கு மகாபாரதம் நிகழ்ச்சிகளை வலியுறுத்தும் வகையில் திருவிழா நடத்தப்படும். இந்த 22 நாள் திருவிழாவையும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சார்பில் பாரம்பரியமாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த கோயில் இந்து அறநிலையத்துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு வழக்கம்போல் 22 நாள் திருவிழா சிறப்பான முறையில் பொதுமக்கள் நடத்தினர். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை மாத பஞ்சமி திதி அன்று தேர்தல் நடத்தை விதிகள் இருந்ததால் அன்று கொடியேற்று விழா நடத்தவில்லை.

மேலும் இப்பகுதி பொதுமக்களின் சார்பில் கோயிலின் பரம்பரை தர்மகத்தா மன்னாதன் கடந்த வாரம் ஏழாம் தேதி எங்கள் கோயில் திருவிழாவை வழக்கம்போல் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா வழக்கம்போல் நடத்திக் கொள்ளலாம் என கடந்த 9ம் தேதி தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 12ம் தேதி கொடியேற்றி விழா நடத்த இப்பகுதி பொதுமக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் தீர்ப்பின் நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி திருவிழா நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து 12ம் தேதி மதியம் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமாதான கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவு நகலை எங்களிடம் காட்டிவிட்டு திருவிழா நடத்திக் கொள்ளலாம் என கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சமாதானம் அடைந்து அன்று கொயேற்றாமல் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொடியேற்று விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதனைப் பார்த்த அறநிலையதுறை சார்பில் இன்றும் நீங்கள் கொடியேற்று விழா நடத்தக்கூடாது என தடை விதித்தனர். அப்போது பொதுமக்கள் சார்பில் நீதிமன்ற உத்தரவின் நகலையும் அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர். அதற்கு அறநிலயத்துறை சார்பில், நீங்கள் இதுவரை 22 நாள் விழாவை பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் வழக்கமாக நடத்தி வந்தீர்கள்.

ஆனால் தற்போது இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என விசிக பிரமுகர் இந்து அறநிலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எனவே பட்டியல் இன மக்களுக்கு ஒரு நாள் திருவிழா நடத்த அனுமதி கொடுத்தால் தான் நீங்கள் திருவிழாவுக்கு அனுமதி கொடுப்போம் என கூறிய அதிகாரிகள் கொடியேற்று விழா நடத்த இரண்டாவது முறையாக தடை விதித்தனர். இதனால் இப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Amman Temple ,Maraganam ,Marakkanam ,Villupuram District ,Marakkanam Dharmapuri Road ,Draupathi Amman Temple ,Panchami Tithi of Chitrai month ,Marakanam ,Dinakaran ,
× RELATED கண்ணமங்கலம் அருகே அக்னி வசந்த...