×

நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை; 5 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்

நெல்லை: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள், 350 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டன. இதனால் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கடற்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரையும், அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வரை வீச கூடும். மேலும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களில் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், புன்னக்காயல், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதே போல வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள் உள்ளிட்டவையும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதுபோல நெல்லை மாவட்டம் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூடங்குளம், கூத்தங்குளி, பெருமணல், பஞ்சல், தேமையார்நகர், ஜார்ஜ் நகர், மிக்கேல்நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் நாட்டுபடகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும், மீன்துறையும் அறிவித்துள்ளது.

The post நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை; 5 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Nellai, Tuticorin ,Nellai ,Tuticorin ,Meteorological Center ,Bay of Bengal ,Gulf of Mannar ,Kanyakumari… ,Dinakaran ,
× RELATED மாடியில் இருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி