×

தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாக தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு சுமார் 450 நபர்கள் தினசரி தற்கொலையால் இறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலைகள் ஏன் நிகழ்கின்றன? அவற்றை எவ்வாறு தடுப்பது? தற்கொலையிலிருந்து மீண்டவர்களை எவ்வாறு கையாள்வது போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னையில் கடந்த 38 ஆண்டுகளாக தற்கொலை தடுப்பு அமைப்பை துவங்கி, இயக்கி வரும் அதன் நிறுவனர், உளவியல் மருத்துவர்
லட்சுமி விஜயகுமார்.

என்சிஆர்பி (NCRB) யின் 2022 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 1,70, 924 நபர்கள் தற்கொலை மூலம் இறந்துள்ளனர். இதன்படி நாள் ஒன்றுக்கு சுமார் 450 நபர்கள் தினசரி இந்தியாவில் தற்கொலையால் இறக்கின்றனர். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் தற்கொலை விகிதம் 18.5 மற்றும் 25.9 ஆக உள்ளது. மேலும் ஒருவரின் தற்கொலை இழப்பின் காரணமாக குறைந்தபட்சம் 7 நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாகின்றனர்.

உதாரணமாக, தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்களை விட அவருக்கு நெருக்கமானவர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதாவது, நெருங்கியவர்களின் இழப்பால், மன அழுத்தம், இழப்பு, தனிமை, குழப்பம், அதிர்ச்சி, துயரம், அவமானம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கையாள முடியாமல், அவர்களும் தற்கொலை எண்ணங்களுக்கு தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நிலையில், அவர்களுக்கு துணையாகவும், ஆதரவாகவும் இருந்து, அவர்களது வாழ்க்கைக்கான வழிவகை செய்து கொடுப்பதே சிநேகா அமைப்பின் நோக்கமாகும்.

இதற்காக, தற்போது SAS என்ற புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம், ஒருவர் தற்கொலை எண்ணங்களுக்கு ஆளாகியிருக்கிறார் என்று தோன்றினால், அவரை எங்களிடம் அழைத்து வரும்போது, அந்த எண்ணத்தை மாற்றி, அவர்களது அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு ஈட்டுசெல்ல ஆலோசனைகள் வழங்குகிறோம். அதுபோன்று, தற்கொலையால் தங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்தவர்களுக்கு, அவர்களின் துயரத்தில் இருந்து மீட்டு அவர்கள் தனியாக இல்லை என்பதை அவர்களுக்கு உணர வைப்பதற்கு உதவுகிறோம். அடுத்து குழு அமர்வுகள் ஏற்படுத்தி, மாதத்திற்கு ஒருமுறை ஒரு தன்னார்வலரின் உதவியோடு அவர்களின் துயரங்களை களைய பேசி பகிர்ந்து கொள்ள வழி வகை செய்து தருகிறோம்.

தனிப்பட்ட முறையில் நேரில் பங்கேற்கமுடியாதவர்கள் ஆன்லைன் அமர்வுகள் மூலமும் பங்கேற்கலாம். இக்கூட்டங்களில் பகிரப்படும் அனைத்து தகவல்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், தற்கொலை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் கவிதைகள், மேற்கோள்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை பகிர ஒரு இணையதளத்தை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்து, ஆதரவும் புரிதலும் இல்லாமல் தங்களின் உணர்வுகளுடன் போராடும் குடும்பங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

சமீபகாலமாக தற்கொலைகள் அதிகரித்து வருதற்கு என்ன காரணங்கள் .. ஏன் அதிகரிக்கிறது..

சமீபகாலமாக தற்கொலை ஏன் அதிகரித்து வருகிறது என்றால், அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டு மக்களை பொருத்தவரை அதிகமாக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள். இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆளாகிறார்கள். அடுத்தபடியாக தன் படிப்புக்கு, திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் போவது, மூன்றாவதாக காதல் தோல்வி அடுத்ததாக சினிமாவின் தாக்கம் அதிகரித்து, சினிமாவை போன்று வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ்க்கை அப்படி அமையாதபோது ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஒருவர் தற்கொலை எண்ணத்துடன் இருக்கிறார் என்பதை எவ்வாறு கண்டறிவது..

நாம் கண்டு பிடிக்கவே தேவையில்லை. அவர்களே நமக்கு தெரிவித்து விடுவார்கள். அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பொதுவாக தற்கொலைகள் நிமிட நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது. ஆனால், அதற்கான எண்ணங்கள் பல நாள்கள் இருந்திருக்கும். உதாரணமாக, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால், இந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை, எனக்கு வாழவே பிடிக்கவில்லை, எங்கயாவது போய்விட வேண்டும் போல் இருக்கிறது என்று இதுபோன்று விரக்தியான வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நாம் அதனை புரிந்து கொள்ளாமல், சாதாரண புலம்பலாக எடுத்துக் கொள்வோம்.

இது கூட தற்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. ஒருவர் தொடர்ச்சியாக இதுபோன்ற வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தால், அவரை சுற்றி இருப்பவர்கள். அவரிடம் பேச்சு கொடுக்க வேண்டும். அவருக்கு என்ன பிரச்னை, ஏன் அவர் அப்படி பேசுகிறார். அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை எல்லாம் மனம்விட்டு பேசி தெரிந்து கொள்ள வேண்டும். முடிந்தளவு அவரை பிரச்னைகளில் இருந்து மீட்க முயல வேண்டும்.

அதற்கான உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும். எந்த கடினமான சூழ்நிலையிலும் உதவுவதற்கு நீங்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்று உணர்த்த வேண்டும். அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். இப்படி செய்யும்போது, தற்கொலை எண்ணங்கள் சிறிது சிறிதாக குறைய தொடங்கும்.

ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்து அதிலிருந்து மீண்டு வந்தவர்களை எவ்வாறு கையாள வேண்டும்.

ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்து மீண்டவர்கள். அவ்வளவு சீக்கிரத்தில் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதில்லை. அந்த எண்ணங்கள் அவர்களுக்கு வருட கணக்கில் கூட இருந்து கொண்டே இருக்கும்.

எனவே, அவர்கள் எதனால் தற்கொலைக்கு முயற்சித்தார்கள் என்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு நம்மால் ஆன முயற்சிகளை செய்ய வேண்டும். நான் ஏற்கெனவே சொன்னது போன்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து , நம்பிக்கையை கொடுக்க வேண்டும். பிரச்னைகளில் இருந்து அவர்கள் வெளியே வர நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். மேலும், அவர்களே பிரச்னைகளில் இருந்து விடுபட ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நல்ல ஆலோசனைகளை வழங்கலாம். உதவிகளை செய்யலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Dinakaran ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...