×

தியாகிகளா அம்மாக்கள்!

நன்றி குங்குமம் தோழி

நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய அம்மா நிறையவே கஷ்டப்பட்டார். எனக்கு பிடித்ததையெல்லாம் செய்வார் என்று அம்மாவை தியாகியாக மாற்றி புகழ்ந்து பேசுகிறோம். இந்த மனப்பான்மை நம்முடைய திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களிலும் பிரதிபலிக்கிறது. தாய்ப் பாசத்தை வைத்து படங்கள் மற்றும் பாடல்களில் காட்சிப்படுத்தப்படுகிறது.

பொதுவாகவே திரைப்படங்கள்

மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் குழந்தைகளுக்காக மட்டுமே வாழும் பெண்களாக அந்த கதாப்பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகிறது. இது மாதிரியான கதாப்பாத்திரங்களின் வழியாக தொடர்ந்து பெண்களை தியாகியாகவே எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த போக்கு சரிதானா என்று கேள்வியினை எழுப்பினால் அதற்கான பதில் நம்மிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அனைத்து உறவுகளும் இருந்தாலும் தாய்ப்பாசம்தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது முதல், கணவரை அன்போடு பார்த்து கொள்ளுதல், அவர் விரும்பும் உணவுகளை சமைத்து தருவது, குழந்தைகளை பராமரிப்பது, கணவர் வீட்டாரை பார்த்து கொள்ளுதல் வரை என கணவருடைய வீட்டுச் சூழலுக்கு ஏற்ப தன்னையே மாற்றிக் கொண்டு அவள் இறக்கும் காலம் வரை வாழ்ந்தால், அவள்தான் சிறந்த அம்மா என்கிறது இந்த சமூகம்.

இதே குணாதிசயங்களோடுதான் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களும் போற்றப்படுகிறது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது தனியாக வாழும் பெண்கள். கணவர் இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து மூலம் பிரிந்து வாழ்ந்தால், அந்த பெண் தன்னுடைய கடைசி காலம் வரை தனியாகத்தான் வாழ வேண்டும். அதுவும் தன் குழந்தைகளுக்காக தன் உழைப்பு முழுவதும் அர்ப்பணித்தால், போற்றுதலுக்குரிய பெண்ணாக பார்க்கிறது இந்த சமூகம்.

திருமணத்திற்குப் பிறகும் வேலைக்கு செல்லும் பெண்களின் வருமானம் என்பது அவருடைய குடும்பத்திற்கானதுதான். தனக்கான வாழ்வு என்பதே கல்யாணம் ஆன பெண்களுக்கு இல்லை என்பது தான் இங்கே இருக்கக்கூடிய பிரச்னை. தன்னுடைய சுயத்தை இழந்து, கனவுகளை இழந்து, வாழ்தலின் மீதான் ஆசையே இல்லாமல் காலம் முழுவதும் தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழும் பெண்களை இங்கே போற்றதலுக்குரியவர்கள் என்றும் குடும்பப் பெண் என்றும் சொல்கிறோம்.

சிறு வயதில் ஒரு பெண் குழந்தையை என்னவாக ஆசைப்படுகிறாய் என்று கேட்டால் டாக்டர் அல்லது ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என சொல்வார்கள். அப்படி சொல்பவர்களில் பாதி பேர் குடும்பச் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமல் சிறு வயதிலேயே வேலைக்கோ அல்லது திருமணம் ெசய்து கொள்வார்கள். அவர்களுடைய கனவுகளை தங்களின் குழந்தைகள் மூலமாக காண்பார்கள். இவர்களுக்கு கிடைக்கும் பட்டப்பெயர்தான் தியாகி.

என் மனைவி வீட்டுப் பொறுப்பை கவனித்துக் கொண்டதால்தான் என் வாழ்க்கை கனவை எட்டிப் பிடிக்க முடிந்தது என கணவரும், எனக்கு பிடித்தவற்றை பார்த்து பார்த்து செய்து, ஊக்கம் கொடுத்ததால்தான் நான் இந்த நிலமைக்கு வந்திருக்கிறேன் என்று குழந்தைகளும் பேசும் போது அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என திரும்ப யாரும் கேட்டதில்லை. இந்த தியாகி பட்டம் எல்லாம் வீட்டை தாண்டி வெளியேறாமல் இருக்கும் பெண்களை குறிவைத்தே சொல்லப்படுகிறது.

முதலாளிகள் தங்களின் வேலையாட்கள் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களை தனிப்பட்ட முறையில் பாராட்டி பெருமைப்படுத்துவார்கள். அதே போலதான் ஒரு பெண்ணை நீ தான் நல்ல குடும்ப பெண், நல்ல அம்மா என்பது எல்லாம், காலம் காலமாக ஆண்கள்பெண்களைஅடிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தும் சொற்கள். ஒருவர் மீதான அக்கறை அல்லது பாசம் அவருக்கு பிடித்தவற்றை செய்வதற்கு தடையாக இல்லாமல் இருப்பது.

இந்த தியாகி பட்டமோ, புகழ்ந்து பேசும் வார்த்தைகளோ பெண்களின் வாழ்க்கைக்கு என்ன பலனை தரப்போகிறது. பெண்களுக்கு தேவைப்படுவது எல்லாம், தங்களின் தொலைந்து போன கனவுகளை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகள்தான். அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலம், சூழல் எல்லாம் பெண்களுக்கு இலகுவாக மாறி வருகிறது. ஆண்களும் அவர்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இது இரு பாலினரான எல்லோருக்கும் வாழ்க்கையின் மீதான கனவுகள் இருக்கும் என்ற புரிதல் இருந்தாலே வரும் தலைமுறையினர் இருவருமே ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post தியாகிகளா அம்மாக்கள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?