×

கோடையில் உடல் வறட்சியை தடுக்க…

நன்றி குங்குமம் தோழி

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சூரியன் ஆரம்பத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் வெயிலில் சுற்றும் போது, உடலில் உள்ள ஆற்றல் முழுவதும்
உறிஞ்சப்படுவதோடு, அதிக தாகமும் எடுக்கும். இந்த தாகத்தைத் தணிக்க நாம் தண்ணீரைக் குடிப்போம். நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பது அவசியம். இதற்கு தண்ணீர் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான பானங்களும் உதவும். நம்மால் எப்போதும் வெறும் நீரை மட்டும் குடித்துக் கொண்டிருக்க முடியாது. உடல் வறட்சி அடையாமல் இருக்க சுவையான மற்றும் ஆரோக்கியமான பானங்களை குடிப்பதே சிறந்த வழி.

*எலுமிச்சை நீர்: ஒரு டம்ளர் நீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அத்துடன் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும்.

*பால்: பால் உண்மையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில் இதில் உடலில் திரவங்களைத் தக்க வைக்க உதவும் நல்ல தரமான கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் சோடியம் போன்றவை உள்ளன. பாலைப் பயன்படுத்தி பல்வேறு மில்க் ஷேக்குகள் மற்றும் தயிரை கொண்டு ஸ்மூத்தி லஸ்சி தயாரித்துக் குடிக்கலாம்.

*இளநீர்: இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் சிறந்த பானம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இதில் கலோரிகள் குறைவு மற்றும் பொட்டாசியம் அதிகம்
என்பதால், சாதாரண நீரை விட சிறந்த பானமாக கருதப்படுகிறது. இயற்கையாகவே உடலுக்கு ஆற்றலை வழங்கும் என்பதால், எனர்ஜி பானங்களுக்கு சிறந்த மாற்று.

*வெள்ளரிக்காய் ஜூஸ் : வெள்ளரியில் 90% நீர்ச்சத்து உள்ளது. உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள பழச்சாறுகளை விட காய்கறி சாறுகள் சிறந்தவை. ஏனெனில் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை நீரேற்றத்தைத் தடுக்கும். இருப்பினும் பழச்சாறுகளை விரும்பினால், எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ள ஆரஞ்சு சாறுகளை பருகலாம்.

*மூலிகை தேநீர் : செம்பருத்தி டீ, ரோஸ் டீ அல்லது சீமைச்சாமந்தி டீ போன்ற மூலிகை தேநீர் மிகவும் சிறந்த நீரேற்றும் பானங்கள். இவற்றில் கபைன் எதுவும் இல்லை என்பதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மட்டுமின்றி, சோர்வடைந்த நரம்புகளை அமைதிப்படுத்தும் மற்றும் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

*கற்றாழை: இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது குடலில் உள்ள நச்சுக்களை நீக்கி பொலிவான மற்றும் பளிச்சென்ற சருமத்தைப் பெற செய்கிறது. சிறிது கற்றாழை ஜெல்லை நீரில் கலந்து, சுவைக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

– பா.பரத், சிதம்பரம்.

The post கோடையில் உடல் வறட்சியை தடுக்க… appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?