×

எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய போதை டிரைவர்; சிசிடிவி பதிவுகள் வைரல்

திருவொற்றியூர்: எண்ணூரில் நேற்றிரவு போக்குவரத்து சீரமைக்கும் பணியில் இருந்த காவலர்களை, ஆட்டோ டிரைவர் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அவர்களை மதுபோதையில் சரமாரியாக தாக்க முயற்சித்த சிசிடிவி கேமரா பதிவுகள் வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை எண்ணூர், பாரதியார் நகர் சந்திப்பில், நேற்றிரவு போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு ஆட்டோ, சாலை வளைவில் திரும்பியபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள், கவிழ்ந்த ஆட்டோவை நிமிர்த்தி, அதற்குள் இருந்த டிரைவரை பத்திரமாக மீட்டனர். டிரைவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஆட்டோ டிரைவரிடம் மதுபோதையில் வாகனத்தை ஓட்டக்கூடாது என்று போலீசார் கண்டித்தனர். இதில் ஆத்திரமான போதை ஆட்டோ டிரைவர், பாரதியார் நகர் சந்திப்பு, எண்ணூர் விரைவு சாலையின் நடுவே அமர்ந்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்தார். பின்னர், சிமென்ட் ஓடை சாலையில் கற்களை போட்டு, போதை டிரைவர் போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளார்.

மேலும், அவ்வழியே வந்த கனரக லாரியை போதை டிரைவர் தடுத்து நிறுத்தி, அதன் முன்சக்கரத்தில் கழுத்தை வைத்து, தற்கொலை செய்து கொள்வேன் என்று போலீசாரிடம் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அங்கிருந்து போதை ஆட்டோ டிரைவரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்களையும் சரமாரி தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மதுபோதையில் போக்குவரத்து காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆட்டோ டிரைவரை எச்சரித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிசிடிவி வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து பணியில் இருந்த காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்த போதை ஆட்டோ டிரைவர்மீது எண்ணூர் போலீசில் போக்குவரத்து தலைமை காவலர் புகார் அளித்தார். தன்னை போலீசார் தேடுவதை அறிந்து, அந்த போதை ஆட்டோ டிரைவர் தப்பியோடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான போதை ஆட்டோ டிரைவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

 

The post எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய போதை டிரைவர்; சிசிடிவி பதிவுகள் வைரல் appeared first on Dinakaran.

Tags : Ennoor ,Thiruvottiyur ,Ennore ,Bharathiar Nagar, Chennai ,
× RELATED சென்னையின் பல பகுதிகளில் 2 மணிநேரமாக மின் தடை!