×

நித்யா அக்காவுடன் ஆயிரம் மேடைகளுக்கு மேல் பண்ணிட்டேன்!

நன்றி குங்குமம் தோழி

‘‘திரையிசைப் பாடல் என்பது முன்கூட்டிய திட்டமிடல். எப்படிப் பாட வேண்டும் என திட்டமிட்டு டியூன் போட்டு பாடுவார்கள். இதில் ரீ டேக் இருக்கும். ஆனால் கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை நேரலைதான். அந்த கணத்தில் என்ன நடக்குதோ அதுதான். இன்றைக்கு கச்சேரியில் நான் பாடும் கல்யாணி ராகம் அடுத்த கச்சேரியில் அப்படியே வராது. எனது கற்பனை எப்படிப் போகுதோ அதற்கு ஏற்ப கல்யாணி ராகத்தை அன்றைக்கு நான் பாடுவேன்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் பிரபல கர்நாடக சங்கீதப் பாடகி வைஷ்ணவி வெங்கட். ‘‘என் அம்மா, அப்பா இருவருமே இசைப் பிரியர்கள்.

அம்மா சேலம் டி செல்லம் ஐயங்காரின் மாணவி. ஆனால் பள்ளி ஆசிரியராக மாறினார். அப்பா பிரபல திரைப்பட நடிகையும் பாடகியுமான பானுமதி ராமகிருஷ்ணனின் மாணவர். அவரும் இசையில் இருந்து விலகி இஞ்சினியரிங் படிக்க ஆரம்பித்து, பின்னாளில் டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் இருவருக்குள்ளும் இசை மீது தீராத காதல் இருந்தது. தங்களுக்குக் கிடைக்காததை குழந்தையை வைத்து சாதிக்க நினைத்தனர்.நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான்.

என் பெற்றோரின் ஆசை கர்நாடக சங்கீதப் பாடகியாக என்னை மாற்றிப் பார்க்க வேண்டும் என்பதே. அதனால் இரண்டு வயதில் இருந்தே சங்கீதம் கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எனக்கு சுத்தமாகப் பாட வராது. ஆனாலும் என் காதுகளில் இசை விழுகட்டும் என விடாமல் அம்மா வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாட்டு டீச்சர்களிடம் அழைத்துச் செல்வார். அதே நேரம் நித்யஸ்ரீமகாதேவனின் பாடல்கள் அடங்கிய இசை நாடா வீட்டில் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கும். நித்யஸ்ரீ மேடத்தின் பாடல்களைக் கேட்டு கேட்டு, அவர் முகத்தைப் பார்க்கும் முன்பே அவரின் குரல் எனக்கு அதிகம் பரிச்சயமானது. நான் நித்யஸ்ரீ மேடத்தின் பைத்தியமானேன்.

ஆரம்பத்தில் எனது பாட்டு ஆசிரியர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தனர். பிறகு தாளம்பாக்கம் அன்னமாச்சாரியார் கீர்த்தனைகளை அவரின் வம்சாவளியான தாளம்பாக்கம் மீன லோஷினி என்பவரிடம் 3 வருடம் தொடர்ந்து கற்றேன். அடிப்படை, சரளி வரிசை, ஜண்ட வரிசை என இசையில் நிறைய வரிசைகள் உண்டு. இத்துடன் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், அன்னமாச்சாரியார் என இசை ஜாம்பவான்களின் கீர்த்தனைகளில் இருந்து 150 முதல் 200 கீர்த்தனைகளைக் கற்ற நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் பாடகி நித்தியஸ்ரீ மேடம் பாடல் பாடி முதல் மூன்று இடத்திற்குள் தேர்வானேன். அதன் தொடர்ச்சியாய் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்வேன்.

‘உன்னுடையது கர்நாடக சங்கீதத்திற்கு பொருந்தக்கூடிய மிக அழகான குரல்’ எனச் சொல்லி என்னை அவரின் மாணவியாக சட்டென எடுத்துக்கொண்டார். அப்போது என் வயது 12.
7ம் வகுப்பு படிக்கிறேன். நிஜமாகவே அவரிடம்தான் பாட்டுக் கற்றுக்கொள்கிறோமா என என்னை நானே அடிக்கடி கிள்ளி பார்த்துக் கொள்வேன். அவர் பாடுவதைக் கேட்டு அப்படியே உறைந்த நிலையிலேயே உட்கார்ந்திருப்பேன். பயத்துடன் ‘மேடம் மேடம்’ என அழைத்த என்னை ‘அக்கா’ என உரிமையோடு அழைக்கச் சொன்னார்.

அன்றிலிருந்து நித்தியஸ்ரீ மேடம் எனக்கு நித்யா அக்காவானார். அவர் மீதிருந்த பயமும் விலகியிருந்தது. நித்யா அக்கா ஒரு பாட்டு இன்றைக்கு எடுத்தால் அதை நான் ஆயுசுக்கும் மறக்கக்கூடாது. லிரிக்ஸ் பார்க்காமல் மைன்ட்ல ஸ்டோர் பண்ணியேதான் பாடல்களைப் பாட வேண்டும். வரிகளும் வார்த்தையும் சரியாக வரவில்லை என்றால் விடமாட்டார். 4 வருடத்திற்குப் பிறகு அவரோடு பல மேடைகளில் தம்புராவை வைத்துக் கொண்டு அவர் பின்னாடியே மேடைகளில் நானும் அவருடன் இருந்தேன்.

10 வருடங்கள் தொடர்ந்து அவருக்கு மேடைகளில் தம்புரா வாசித்தேன். இதுவே எனக்கு இசையில் மிகப்பெரிய படிப்பினையாக அமைந்தது. காரணம், நித்யா அக்கா பாடும் 20 விதமான கல்யாணி ராகத்தை மேடைகளில் நான் அருகில் இருந்தே கேட்டிருப்பேன். ஒரு கச்சேரியில் பாடும் சண்முகப்பிரியா ராகத்தை இன்னொரு கச்சேரியில் அப்படியே நித்யா அக்கா பாட மாட்டார். ராகங்களை பல வெர்ஷனில் அவரிடத்தில் கேட்டுகேட்டுப் பழகினேன்.

“என் பாட்டி டி.கே. பட்டம்மாளிடம் நான் இப்படித்தான் இசை கற்றுக்கொண்டேன் வைஷு” என என்னிடம் நித்யா அக்கா சொல்லுவார். நானும் அதுபோலவே அக்காவுடன் கச்சேரிகளுக்கு போயி போயித்தான் இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். காரணம், கர்நாடக சங்கீதத்தை நான்கு சுவற்றுக்குள் கற்றுக்கொள்வது தியரிடிக்கலாக இருக்கும். நித்யா அக்காவோடு ஆயிரம் மேடைகளுக்கு மேல் பண்ணிட்டேன்.

அவர் பாடுவதை நிறைய கூர்ந்து கவனிப்பேன்.தம்புரா வாசித்துக் கொண்டிருந்தவள், பிறகு நித்யா அக்காவோடு இணைந்து தம்புராவுடன் பாட ஆரம்பித்தேன். பிறகு என் முன்பு மைக் வைத்து என்னை அவருடன் பாட வைத்தார். அதன் பிறகே தனி மேடைக் கச்சேரிகளை பண்ண ஆரம்பித்தேன். என் முதல் தனி மேடைக் கச்சேரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்தது.

கீரவாணி ராகத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பாடுவார்கள். ஒவ்வொருத்தர் கிரியேட்டிவிட்டியும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் பிரேமிற்குள் அது இருக்க வேண்டும். காபி ராகத்தை ராக ஆலாபனை பண்ணும்போது, அந்த மொமென்ட் மேடையில் என் குரலில் என்ன ஆலாபனை வருதோ அதுதான். இந்த மனோதர்ம பார்வை கர்நாடக சங்கீதத்தில் ரொம்ப முக்கியம். கூடவே கர்நாடக சங்கீதம் அனுபவத்தில் உணர்ந்து வரணும். லைவ்வாக இரண்டரை மணிநேரம் மேடைகளில் பாடுவதற்கு இந்த அனுபவ அறிவு முக்கியம். கூடவே இசை குறித்த பல வருடக் கற்றலும் தேவை.

இசை ஒரு கடல். அதில் நாம் கற்பது கடுகளவே. தியாகராஜர் 16 ஆயிரம் கீர்த்தனைகளும், அன்னமாச்சாரியார் 32 ஆயிரம் கீர்த்தனைகளும், சியாமா சாஸ்திரிகள் 10 ஆயிரம் கீர்த்தனைகளும் என ஒவ்வொருத்தரும் ஆயிரக்கணக்கில் எழுதி வைத்துள்ளார்கள். இவை எல்லாவற்றையும் கற்று முடிக்க இந்த ஒரு ஜென்மம் பத்தாது. கர்நாடக இசைக்கு முடிவே இல்லை. பேரார்வம் இருந்தால் மட்டுமே இதில் பயணிக்க முடியும்’’ என்றவாறு விடைபெற்றார் கர்நாடக இசைப் பாடகியான வைஷ்ணவி வெங்கட்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post நித்யா அக்காவுடன் ஆயிரம் மேடைகளுக்கு மேல் பண்ணிட்டேன்! appeared first on Dinakaran.

Tags : Nitya Akka ,Kumkum Dothi ,Carnatic Sangeet ,
× RELATED சைகை மொழி