×

திருவேற்காடு கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் தள்ளுமுள்ளு: சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் குடியிருப்புவாசிகள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் குடியிருப்பு இருப்பதாகவும் இதை அகற்ற வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையினர் கூவம் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியும் சில நாட்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு வந்தனர்‌.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் திருவேற்காடு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அகற்றப்பட உள்ள குடியிருப்புகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திருவேற்காடு பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

 

The post திருவேற்காடு கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் தள்ளுமுள்ளு: சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvekkadu Koovam ,Poontamalli ,Thiruvekadu Koovam ,Perumal ,Tiruvekadu ,Municipality ,Tiruvekadu Koovam ,Dinakaran ,
× RELATED திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம்...