×

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்

தர்மபுரி, மே 17: தர்மபுரி மாவட்டத்தில் மின் கம்பங்களில் ஏறி பணிபுரியும் மின் ஊழியர்கள், விபத்தில் சிக்குவதை தவிர்த்து பாதுகாக்க, வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்ட 200 ஹெல்மெட் மின்வாரிய ஊழியர்களுக்கு முதற்கட்டமான வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவி கம்பத்தில் ஏறும் போது, 3 அடி தூரத்தில் மின்சார சப்ளை இருந்தால் ஒளி, ஒலி எழுப்பக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்திற்கு மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. தர்மபுரி மின்பகிர்மான வட்டத்தில் தர்மபுரி, தர்மபுரி கிராமம், பென்னாகரம், கடத்தூர், அதியமான்கோட்டை, பொம்மிடி, இருமத்தூர், அரூர் உள்ளிட்ட 68 துணை மின்நிலையங்கள் உள்ளன. இந்த துணை மின்நிலையங்கள் வழியாக, மாவட்ட முழுவதும் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் 6.5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்திற்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 80 பொறியாளர்கள் உள்பட 1,400 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மின்வாரியம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. மழைக்காலம், காற்றுக்காலம், புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலத்தில், எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மின் தடைகளை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மின்வாரிய கேங்மேன்கள் எந்த நேரமாக இருந்தாலும், மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிபார்க்கின்றனர். இதுபோன்ற சில சமயங்களில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழக்க நேரிடுகிறது. இந்த உயிரிழப்பை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தர்மபுரி அருகே புலிகரை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சமீபத்தில் 2 மின் ஊழியர்களும், அரூர் அருகே ஒரு மின் ஊழியரும் மின்கம்பத்தில் வேலை செய்துகொண்டு இருந்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க, மின் கம்பத்தில் ஏறும் போதே, கம்பிகளில் மின்சாரம் இருப்பதை கண்டறிய, `வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்காந்த அலை மற்றும் சென்சார் மூலம் இக்கருவி செயல்படும் வகையில் வடிவமைத்து உள்ளனர்.

அதாவது மின்கம்பத்தில் ஏறும் ஊழியர்கள், தங்களது தலையில் அணிந்துள்ள ஹெல்மெட் அல்லது கையில் இந்த கருவியை பொருத்திக் கொள்ள வேண்டும். கம்பத்தின் உயரத்திற்கு செல்லும் போது, சுமார் 3 அடி தூரத்தில் மின் ஒட்டம் இருப்பது, அந்த கருவியில் உள்ள சென்சார் மூலம் தெரியவந்துவிடும். உடனே எச்சரிக்கை ஒலி எழுப்பும். அப்போது மின் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மின் விபத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளலாம். முதற்கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 53 பிரிவு அலுவலகங்களுக்கும் தலா 3 முதல் 4 எண்ணிக்கையில் மொத்தம் 200 வோல்டேஜ் சென்சார் டிடெக்டர் கருவிகள் மற்றும் தலைகவசம் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,‘மின் கம்பங்களில் ஏறும் மின் ஊழியர்கள் தவறுதலாகவோ, கவனக் குறைவு காரணமாகவோ மின் ஓட்டம் உள்ள பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எதிர்பாராத உயிரிழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில், இந்த ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி பொருத்திய ஹெல்மேட் (தலைகவசம்) வழங்கப்பட்டுள்ளது. மின் ஊழியர்கள் கம்பத்தில் ஏறும் போது, கை கடிகாரம் போலவும், இதனை கட்டிக்கொள்ளலாம். கம்பத்தில் மின் ஓட்டம் இருந்தால், 3 அடிக்கு முன்னதாகவே அந்த கருவி ஒளியுடன் ஒலி எழுப்பி எச்சரிக்கை விடுக்கும். மின் ஊழியர்கள் பாதுகாக்கப்படுவர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்படும். மின் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இதனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இந்த கருவியை பயன்படுத்தாமல் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு