×

கனமழை காரணமாக பருத்தி பயிர்களை சூழ்ந்த மழைநீர்

திருவாரூர், மே 17: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக கத்திரி வெயில் தகர்த்தெறிந்த நிலையில் பருத்தி பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் இருந்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 105 டிகிரி முதல் 115 டிகரி வரையில் கடந்த 2 மாத காலமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரம் முன்பு வரையில் 105 டிகிரி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இதன் காரணமாக பொது மக்கள், கல்லு£ரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வெயிலை சமாளிப்பதற்காக பொது மக்கள் தங்களது வசதிக்கேற்ப இளநீர், நீர்மோர், பனைநுங்கு, தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றினை பயன்படுத்தி தங்களது உடல் வெப்பத்தை குறைத்து வந்தனர்.

இந்நிலையில் வெப்ப சலணம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் கடந்த 8ந் தேதி முதல் நேற்று முன்தினம் (15ந் தேதி) வரையில் ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் ஓரளவு வெப்பம் குறைந்ததையடுத்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் துவங்கிய மழையானது காலை 8 மணி வரையில் மாவட்டம் முழுவதும் கனமழையாக பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடிய நிலையில் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கோடை நெல் சாகுபடிக்கு இந்த மழை உகந்ததாக இருந்து வந்தாலும், பருத்தி மற்றும் எள் பயிருக்கு இந்த மழை உகந்ததல்ல என்ற நிலையில் தற்போது பருத்தி சாகுபடி வயலில் மழைநீர் தேங்கியுள்ளதால் இதேபோன்று மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் பயிர்கள் பாதிப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையில் பெய்த மழையளவு மி.மீ வருமாறு, திருவாரூர் 28, நன்னிலம் 24.4, குடவாசல் 47.2, வலங்கைமான் 42, மன்னார்குடி 131, நீடாமங்கலம் 54.2, பாண்டவையாறு தலைப்பு 14.8, திருத்துறைப்பூண்டி 62.4, முத்துப்பேட்டை 53.8 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 457.8 மி.மீ மழை பெய்த நிலையில் சராசரியாக 50.86 மி.மீ பதிவாகியுள்ளது. அதன்பின்னரும் காலை 10 மணி வரையில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post கனமழை காரணமாக பருத்தி பயிர்களை சூழ்ந்த மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Katthiri Veil ,Tiruvarur district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...