×

₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக விருதுநகர் புலனாய்வு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு சேத்தூருக்கு வெளிப்பகுதியில் அமைந்துள்ள ஜவுளிக்கடை அருகே ஒருவர் சந்தேகப்படும்விதமாக பைக்கில் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, தலா 1 அடி உயரம், 3.5 கிலோ எடை ெகாண்ட இரண்டு யானை தந்தங்கள் இருந்தன.

விசாரணையில், அவர் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த ராம் அழகு (40) என்பது தெரியவந்தது. அவர் கொண்டு வந்த தந்தங்களின் மதிப்பு ₹60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து ராம் அழகை தந்தங்களுடன் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். யானை தந்தங்களை தேவதானத்தை சேர்ந்த செல்லையா (35) என்பவரிடம் வாங்கியதாக வனத்துறையிடம் அவர் கூறினார். இதையடுத்து செல்லையாவை கைது செய்த வனத்துறையினர், தந்தங்கள் எப்படி கிடைத்தது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.

The post ₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Rajapaliam ,Virudhunagar Investigation Unit Police ,Sethur ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED திருநள்ளாறு அடுத்த சேத்தூர் மகா...