×

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை: டெல்டாவில் விடிய விடிய வெளுத்தது; கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை ெபய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி மாத இறுதியிலிருந்து 2 மாதமாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை மதியம் 3 மணி வரை நீடித்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணி முதல் லேசான மழை பெய்தது. செம்பனார்கோவிலில் நேற்று காலை காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் இருந்த 50 ஆண்டு பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதல் பலத்த மழையும், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் மிதமான மழையும் பொழிந்தது. கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மாவட்டங்களிலும் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பொழிந்தது. கரூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை மழை தூறி கொண்டே இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் தொடங்கி பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், நேற்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை விவேகானந்தர் நினைவிடம் செல்ல படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாக்கம்பாளையம் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாரல் மழை பொழிந்தது. மதுரை மாவட்டம் திருமலங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், ராமநாதபுரம் கடலோர பகுதிகளிலும், தேனி மாவட்டத்தில் பரவலாகவும் மழை பெய்தது. மழை காரணமாக வைகை அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதுமே நேற்று வெயில் குறைந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாய்ந்த மரத்தை தூக்கியபோது மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குள்ளநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல்(55). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி(50). இவர்களது மகன் கவின் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார். மகள் சவுமியாவுக்கு திருமணமாகி கைக்குழந்தையுடன் தாய்வீட்டிற்கு வந்திருந்தார். இவர்களது நிலத்தில் யூகலிப்டஸ்(தைல மரங்களை) நடவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், யூகலிப்டஸ் மரங்கள் அடியோடு சாய்ந்தன.

நேற்று காலை தங்கவேல்-சரஸ்வதி தம்பதி தோட்டத்திற்கு சென்று சாய்ந்து கிடந்த மரங்களை தூக்கி முட்டுக்கொடுத்து நேர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மின்கம்பத்தின் மீது சாய்ந்திருந்த மரத்தை இழுத்தபோது, சரஸ்வதியை மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார். அவரை தூக்குவதற்காக தொட்ட தங்கவேல் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல சேலம் அம்மாப்பேட்டையில் மளிகை கடை நடத்தும் தண்டபாணி(40), அங்கு புதிய போர்டை மாட்டியபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

The post தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை: டெல்டாவில் விடிய விடிய வெளுத்தது; கோடை வெப்பம் தணிந்து இதமான சூழல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delta ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED தமிழகத்தில் கோடை மழையால்...